Home ஆய்வுகள் ஐ.நாவில் திமிறும் இலங்கை – மக்களின் மனப்பதிவுகள் – சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வென்ன? –...

ஐ.நாவில் திமிறும் இலங்கை – மக்களின் மனப்பதிவுகள் – சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வென்ன? – பி.மாணிக்கவாசகம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் காரசாரமான அறிக்கையையடுத்து சூடேறியிருந்த இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு கொதிநிலையை எட்டி இருக்கின்றது. கொதிநிலை என்பதையும்விட அந்த அரங்கு ஒரு போர்க்களமாக மாறியிருக்கின்றது என்றே கூற வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவதில் தவறிருக்க முடியாது.

அதீத ஆயுத பலத்தையும் ஆக்கிரமிப்பு போக்கையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட ராஜபக்சக்கள் 2015 தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் மீண்டும் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் முன்னைய அரசாங்கத்தின் ஐ.நா பிரேரணைக்கான இணை அனுசரணையில் இருந்து தன்னிச்சையாக விலகிக் கொண்டார்கள்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 ஐ.நாவில் திமிறும் இலங்கை - மக்களின் மனப்பதிவுகள் - சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வென்ன? - பி.மாணிக்கவாசகம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளையும், அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் இலங்கை நிறைவேற்றப் போவதில்லை என்ற அழுத்தமான செய்தியையே இந்த விலகல் வெளிப்படுத்தி இருந்தது.

உலகின் 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் இருந்து விலகிக் கொள்வதென்பது சாதாரண விடயமல்ல. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது.

அதற்கும் மேலாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது அமர்வையொட்டி, மனித உரிமை ஆணையாளர் மிட்சல் பட்சட் வெளியிட்டிருந்த இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான கடினமான அறிக்கையை அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், அந்த அறிக்கை இலங்கையின் இறைமையை மீறுகின்ற வகையிலான அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், யுத்தத்தின் மூலம் வெற்றிகொள்ளப்பட்ட பயங்கரவாதத்தை (விடுதலைப்புலிகளை) மீண்டும் உயிர்பெறச் செய்வதற்கான கருவியாகவே மனித உரிமை அலுவலகம் செயற்படுகின்றது என்ற மிக மோசமான ஒரு குற்றச்சாட்டையும் மனித உரிமைகள் பேரவை அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஐநாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகிய முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்வைத்திருந்தார்.

அவருடைய கூற்று அந்தப் பேரவையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு முகத்திலடித்தாற்போன்று ஐநா மன்றச் செயலாளர் நாயகம் அன்ரோனியா குட்ரஸ் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து அந்தப் பேரவையில் இலங்கை விவகாரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தருணத்திலும் இலங்கை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நிராகரித்திருந்தது.

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறுதலை வலியுறுத்துவதன் மூலம், நாட்டின் இறைமையை மீறுகின்ற நடவடிக்கையை ஐ.நா மேற்கொண்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டிய சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பேரவையின் உறுப்பு நாடுகளைத் தமது நாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என கோரியிருந்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளைச் சுட்டிக்காட்டி, போர்க்கால உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும், பேரவையும் வலியுறுத்துவதை அரசு தங்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதுகின்றது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளரும் மனித உரிமைகள் பேரவையும் தங்களை வீணாகக் குற்றம் சுமத்துகின்றார்களே என்ற மனப்பாங்கையே கொண்டிருக்கின்றது.

மனித உரிமை நிலைமைகள் சீரழிந்திருக்கின்றன. ஜனநாயகச் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்று நாட்டின் நிலைமைகளை யதார்த்தமாகச் சுட்டிக்காட்டுவதை கோத்தபாயா அரசு பகைமைப் பார்வையிலேயே அணுகுகின்றது.

இந்த நடவடிக்கை நாட்டின் இறைமையை மீறி அரசியல் ரீதியாகப் பழிவாங்க முற்படுகின்றது. யுத்தத்தை வெற்றிபெறுவதற்காகப் போரிட்ட இராணுவத்தினரைப் பலிக்கடாக்களாக்கவே முயற்சிக்கின்றது என்ற நிலைப்பாட்டில் ஒரு விரோத நிலையிலான அணுகு முறைமையையே கையாண்டு வருகின்றது.

மனித உரிமைகள் அரசியல் இலாப நோக்கங்களுக்காகவே மீறப்படுகின்றன. மனித உரிமை மீறல்களையும் அது சார்ந்த போர்க்குற்றச் செயல்களையும் அரசியல் நோக்கங்களுக்காகவே மறுத்துரைக்கப்படுகின்றன. நிராகரிக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு நிலையில்தான் இலங்கை விவகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொதித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரம் குறித்த வடமாகாணத்தின் பல்வேறு இடங்களையும் சேர்ந்த சிலரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்கள்.

ஜெகநாதன்

ஐ.நாவினால் இலங்கையைக் கையாள முடியாதிருக்கின்றது என்று து.அ.ஜெகநாதன் வர்ணித்தார்.

‘ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையை வழிக்குக் கொண்டு வர முடியாதுள்ளது. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமே இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இனப்பிரச்சினையைப் பொறுத்தமட்டில் இலங்கைக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும்’ என்றார் அவர்.

செ.சந்திரகுமார்

தமிழ் விருட்சம் என்ற மனிதநேய செயற்பாட்டு அமைப்பைச் சேர்ந்த செ.சந்திரகுமார் (கண்ணன்) கருத்து கூறுகையில், ‘ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவதில் முன்னணியில் இருக்கின்ற நாடுகள்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உளப்பூர்வமாக விரும்பியிருந்தால், யுத்தம் முடிவுக்கு வந்த கடந்த 12 வருடங்களில் எப்போதோ முடிவு கண்டிருக்கலாம். தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையையும் ஏக்கத்தையும் அந்த நாடுகள் தங்களது அரசியல் நலன்களுக்காகவே பயன்படுத்துகின்றன. அடுத்தடுத்து இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகளைக் கொண்டு வந்து பொறுப்பு கூற வேண்டும் என்று வெறுமனே வலியுறுத்துவது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே அல்லாமல் வேறில்லை’ என கசப்பான மன உணர்வுடன் கூறினார்.

திவியா சிவகுமார்

‘நீதி கோரி தமிழ் மக்கள் விடுகின்ற கண்ணீர். வீணாக முடியாது. அதற்கு பதில் சொல்லப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி வழங்கியே ஆக வேண்டும்’ என ஊடகவியலாளராகிய திவியா சிவகுமார் குறிப்பிட்டார்.

‘யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் பன் கீ மூனிடம் நேரடியாக உறுதியளித்த அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. ஐ.நா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி பொறுப்பு கூறுவதாக ஒப்புதல் அளித்த ரணில் – மைத்திரி அரசும் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த அரசுகள் காலம் கடத்தி பிரச்சினைகளை மழுங்கடிப்பதிலேயே குறியாக இருந்தன. புதிய அரசாங்கம் முன்னைய அரசுகளைப் போலல்லாமல் நேரடியாகவே பொறுப்பு கூற முடியாது. ஐ.நாவுக்குக் கட்டுப்பட முடியாது என தெரிவித்திருக்கின்றது. இந்த நிலைமை கவலைக்குரியது’ என்றார் திவியா.

  மன்னார் பெனில்

மாற்றுத்திறனாளியும் ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞருமாகிய மன்னார் பெனில் கருத்துரைக்கை, மனங்களில் ஏக்கங்களையுமே விட்டுச் சென்றிருக்கின்றன. காலம் கடந்தேனும் இந்த அமர்வின்போது நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது’ என தெரிவித்தார். அவருடைய குரலில் ஆற்றாமை நிறைந்திருந்தது.

‘பல்லாயிரம்  உயிர்களை கண்முன்னே இழந்தோம். எத்தனையோ உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக உயிருடன் தொலைத்துவிட்டு மனநோயாளிகளாகப் போராடி வருகின்றோம். தாயக மண்ணை படிப்படியாக இழந்து கொண்டிருக்கின்றோம். பன்னிரண்டு ஆண்டுகளாக நாம் ஐ.நாவை நம்பியிருந்தோம். இன்னும் ஐ.நாவை நம்புகிறோம். இதைத் தவிர வேறு மார்க்கம் எங்களுக்குத் தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் எப்போது முடிவு காணுவது?  ஏன் தமிழர் நாம் சர்வதேசத்தினால் இவ்வாறு வஞ்சிக்கப்படுகின்றோம்?’ என்று மன்னார் பெனில் கேள்வி எழுப்பினார்.

கோமகன்

“ஜெனிவா நிலைமைகள் கவலை அளிப்பதாகவே இருக்கின்றன” என்று கருத்து வெளியிட்ட கோமகன், ‘அரசு தனது பிடிவாதப் போக்கில் இருந்து மாற வேண்டும்’ என கூறினார்.

தொடர்ந்து கருத்துரைத்த கோமகன்;, “சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் புறக்கணித்துச்செயற்படுவதைப் போன்று சர்வதேசத்தைப் புறக்கணித்துச் செயற்பட முடியாது. சர்வதேசம் அதனைத் தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள மாட்டாது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும். இல்லையேல் நாடு மோசமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியமே காணப்படுகின்றது” என்றார்.

சமூகச் செயற்பாட்டாளர்

தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுதலோடு கருத்துரைத்த ஒரு சமூகச் செயற்பாட்டாளர், “ஜெனிவாவில் நிலமைகள் மோசமடைவது நல்லதல்ல” என தெரிவித்தார். அவருடைய குரலில் எச்சரிக்கையும் எதிர்காலம் குறித்த கவலையும் தொனித்தன.

“நான் ஒரு சமூகச் செயற்பாட்டாளர் என்ற ஒரே காரணத்திற்காக நான் விசாரணைகளுக்கு உள்ளாகினேன். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் நான் கலந்து கொள்ளவே இல்லை. வீட்டிலிருந்த என்னை விசாரணை செய்தார்கள். என்னிடம் வாக்குமூலம் பெற்றார்கள். இந்த நாட்டில் நீதி இல்லை. நியாயமும் இல்லை. நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நிராசையாகவே முடியும். ஜெனிவாவுக்கு அப்பால் சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடாகவே நீதியை நிலைநாட்ட முடியும். இதனை உலக நாடுகளே முன்னின்று செய்ய வேண்டும்” என்றார் தனது பெயரைக் கூறுவதற்கு மறுத்துவிட்ட அந்த சமூகச் செயற்பாட்டாளர்.

ஐநா மன்றம் உலகளாவிய நாடுகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாகவும், அதில் மனித உரிமைகள் பேரவை ஒரு முக்கிய உறுப்பாகவும் இருக்கின்ற போதிலும், ஐ.நாவுக்கும்சரி மனித உரிமைகள் பேரவைக்கும்சரி, அவற்றின் செயற்படு பரப்பிற்கு ஓர் எல்லை உண்டு. இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது செயற்படு எல்லையின் உச்சகட்டத்தை எட்டிவிட்டார் என்றே தோன்றுகின்றது.

ஏனெனில் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி  பிரேரணைகளை நிறைவேற்றி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று பல தடவைகள் வற்புறுத்தியும்கூட இலங்கையில் மாறி மாறி வந்த அரசுகள் அதற்கமைய பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை. ஆனால் 2021 இல் பொறுப்பு கூறும் விடயத்திலும், ஜனநாயகத்தைப் பேணுவதிலும் புதிய அரசு ஐநா மனித உரிமைகள் பேரவைக்குக் கட்டுப்படாமல் திமிறிக் கொண்டிருக்கின்றது. அதுவும் சாதாரண திமிறலல்ல. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரையும் மனித உரிமைகள் பேரவையையும் சவாலுக்கு உட்படுத்தும் வகையிலான திமிலாக இருக்கின்றது.

இந்த நிலையில் இலங்கை விவகாரம் குறித்து பேரவையின் உறுப்பு நாடுகள் மாற்று வழியின் ஊடாக இலங்கையைக் கையாள வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் மிட்சல் மிச்செல் பச்லெட் வலியுறுத்தி கோரியிருக்கின்றார். இது ஐ.நா மனித உரிமைப் பேரவை அதன் உச்சத்தைத் தொட்டு நிற்பதன் அறிகுறியாகவே வெளிப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேசத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது மில்லியன் டொலர் கேள்வியாக எழுந்திருக்கின்றது.

Exit mobile version