ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த 22 நாடுகளுக்கும் நன்றி- மருத்துவர் – அன்புமணி இராமதாஸ்

ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த 22 நாடுகளுக்கும் தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்

சிறீலங்காவிற்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. ஈழத்தமிழர் நீதிக்கான பாதையில் இது ஒரு மைல்கல் ஆகும். தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 22நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மருத்துவர் அன்புமணி ராமதஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

“இலங்கை தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த ஒரு பன்னாட்டு பொறிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என பாமக தொடர்ந்து கோரி வருகிறது. அக்கோரிக்கை UNHRC புதிய தீர்மானத்தின் மூலம் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

இதற்காக 2018இல் பசுமைத் தாயகம் கையெழுத்து பிரச்சாரம் நடத்தியது. 31.12.2018இல் பாமக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. மருத்துவர் அய்யா 21.1.2018, 04.02.2019, 26.02.2019ஆகிய நாட்களிலும், நான் 21.02.2020 அன்றும் அறிக்கை வெளியிட்டோம். 1.3.2021ல் UNHRC கூட்டத்தில் நான் பேசினேன்.

 புதிய தீர்மானத்தின் மூலம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட, பன்னாட்டு குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி, பன்னாட்டு குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தயாராகும் பணிகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இனி மேற்கொள்ளும்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் இந்த தீர்மானம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு நீதியையும் உரிமையையும் நிலை நாட்ட உறுதி ஏற்போம்.” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.