‘ஐநா பிரேரணையும் தமிழ்த்தரப்பின் பொறுப்பும்’ – பி.மாணிக்கவாசகம்

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை தமிழ் மக்கள் எதிர்கொள்வது எப்படி, அதனை எவ்வாறு கையாளலாம் என்பது இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

பொறுப்பு கூறும் விடயங்களிலும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் நீதி, சட்டவாட்சி, சிவில் நிர்வாக, ஜனநாயக நிலைமைகளிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் காரசாரமாக விபரித்திருந்தார். இதனால் அவருடைய அறிக்கை பரந்த அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. அரசாங்கம் உள்ளிட்ட பலதரப்பினருக்கு அது அதிர்ச்சியளிக்கத்தக்காக அமைந்திருந்தது.

பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களுக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும் அந்த அறிக்கை உற்சாகமளிப்பதாக அமைந்திருந்தது. குறிப்பாக தமிழ்த்தரப்பினருக்கு தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்கான கிடைப்பதற்கரிய வாய்ப்பு கிட்டிவிட்டது என்ற வகையிலான ஒரு திருப்தி உணர்வை அது அளித்திருந்தது.

ஆனால் ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை வரைபில் மனித உரிமைகள் ஆணையாளர் முன்மொழிந்திருந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று பொத்துவில் – பொலிகண்டி பேரணியின் அறிக்கை மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அறிக்கைகள் என்பவற்றின் கோரிக்கைகளும் அந்த வரைபில் இடம்பெறவில்லை. அவை பற்றிய அம்சங்களும் உள்ளடக்கப்படவில்லை. இது தமிழ்த்தரப்பினருக்குப் பலத்த ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள் அந்தப் பிரேரணையை நிராகரிப்பதாகக் கூறியிருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏனைய கட்சிகளைப்; போன்று அப்பிரேரணையை முற்றாக நிராகரிக்க மாட்டாது என்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை வலியுறுத்தும் வகையிலான கருத்துக்களையே வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கமும் அந்த பிரேரணைக்கான வரைபை ஏற்கவில்லை. ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரேரணை கொண்டு வரப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறு கொண்டு வரப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட பிரேரணையை எதிர்க்க வேண்டும் என்று பேரவையின் உறப்பு நாடுகளிடம் வெளிப்படையாகவே அரசு கோரியிருந்தது.

அது மட்டுமல்லாமல் அந்தப் பிரேரணை இலங்கைக்கு எதிராக, அதன் நடவடிக்கைகளில் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகின்றது. உண்மையில் இலங்கையில் சீர்கெட்டுள்ள மனித உரிமை உள்ளிட்ட நல்லாட்சிக்கும் ஜனநாயகத்துக்குமான நிலைமைகளை மேம்படுத்தக் கோருவதே அந்தப் பிரேரணையின் நோக்கம்.

இரு தரப்புக்களின் முரண்பாடான எதிர்பார்ப்பு

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பல்வேறு விடயங்களை முன்வைத்து, பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை வன்மையாகச் சுட்டிக்காட்டியிருந்தது. அதேவேளை, மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் விடயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தது. இதன் காரணமாகவே அரசாங்கம் அந்த அறிக்கையை நிராகரித்து, மனித உரிமை ஆணையாளர் வேண்டுமென்றே – தனது ஆணையை மீறிய வகையில் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்கின்றார் என குற்றம் சாட்டியிருந்தது.

ஆக மொத்தத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையின் உத்தேசப் பிரேரணை பெரும்பான்மையான தமிழ்த்தரப்புக்கும் திருப்தி அளிக்கவில்லை. அதேபோன்று அரசாங்கத்திற்கும் திருப்தி அளிக்கவில்லை.

எனினும் இரண்டு தரப்பினருக்கும் திருப்தி அளிக்கத்தக்க வகையிலான விடயங்கள் என்பது நேர் முரணானவை. ஒரு முரண்பாடான நிலைமையிலேயே இரு தரப்புக்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றன.

ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்படுகின்ற பிரேரணை அதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டது. அது உறுப்பு நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு நிலைமைகளிலான உலக அரசியல் நிலைமைகளைச் சார்ந்து, இராஜதந்திர முறையில் வரையப்படுகின்றது என்பதே யதார்த்தம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான அரசாங்கத்தைக் கொண்டுள்ள இலங்கை நாட்டின் இறைமையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் ஐநா மனித உரிமைப் பேரவை நடந்து கொண்டிருக்கின்றது என்பதே அரசாங்கத்தின் குற்றச்சாட்டாகும்.

ஐநா மனித உரிமை ஆணையாளருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை நாட்டின் உள்விவகார விடயங்களாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள். ஆணையாளர் எல்லை மீறிய வகையில் அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஒரு நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து கேள்வி கேட்கவோ, அவற்றை விமர்சிக்கவோ அல்லது அவை தொடர்பில் குற்றஞ்சாட்டவோ மனித உரிமை ஆணையாளருக்கு உரிமை இல்லை என்பது அரசாங்கத்தின் வாதம்.

ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள உரிமை மீறல்கள், மனிதநோயத்திற்கு எதிரான செயற்பாடுகள், போர்க்குற்றங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பேற்று நீதி கிடைக்கச் செய்வதற்குரிய வழிவகைகளைச் செய்யும் விதத்தில் பிரேரணை அமைய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்தப் பிரேரணை எத்தகைய வரவேற்பை பேரவையில் பெறப்போகின்றது என்பதும் முக்கியம். பிரேரணை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுமா அல்லது வாக்கெடுப்பு இல்லமாலேயே அது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. அது குறித்து நிச்சயமான அறிகுறிகள் தென்படவில்லை.

தமிழ்த்தரப்பின் பொறுப்பு

ஆயினும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரான இன, மத ரீதியிலான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் அதிகாரத்தோரணையில் அதிகமாகி இருக்கின்றன. சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சி நிலைமைகள் நாளுக்கு நாள் வளர்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னரான கடந்த 12 ஆண்டுகளாக பொறுப்பு கூறும் விடயத்தை தொடர்ச்சியாக அரசுகள் புறக்கணித்து வந்துள்ளன. அந்த பொறுப்பைப் புறக்கணித்து இழுத்தடித்தது மட்டுமல்லாமல் மழுங்கடிக்கச் செய்யும் முயற்சிகளில் ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே நாட்டின் நிலைமைகள் தொடர்பிலாக ஊடக அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் மனித உரிமைப் பேரவைக்கு அப்பால் உறுப்பு நாடுகள் தனித்தனியாகத் தங்களது ஆட்சிப் பரப்புக்கு உட்பட்ட சட்டதிட்ட நிலைமைகளுக்கு அமைவாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. இதற்கு மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும், அதன் ஊடாக அவர் முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளும் வலுச் சேர்த்திருக்கின்றன என்றே கூற வேண்டும்.

மனித உரிமைப் பேரவையின் பிரேரணை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமையாத போதிலும், பேரவையின் அமர்வுக்குப் பின்னரான நிலைமைகளில் பாதிப்புகளுக்கு நியாயம் தேடக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.

ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களும், தமிழ்த்தேசிய கட்சிகளும் இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்பது சிந்தனைக்கு உரியது. இந்த விடயத்தில் களத்தில் உள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிலும் பார்க்க புலம் பெயர்தேசத்துத் தமிழ் மக்களின் அமைப்புக்களும் கட்டமைப்புக்களும் செயற்படுவதற்கான சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன.

அந்தந்த நாடுகளின் அரசியல் நிலைமைகள், அவற்றில் தமிழ் மக்களும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் அரசியலில் கொண்டிருக்கின்ற செல்வாக்கு மற்றும் அவற்றின் அரசியல் நேச சக்திகளின் ஒன்றிணைவு என்பவற்றின் அடிப்படையில் இந்த சந்தர்ப்பங்களை அந்த மக்களும் அவற்றின் அமைப்புக்களும் முறையான வகையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

அதேவேளை, பொறுப்பு கூறும் கடப்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையின் மூலம் நீதிகோரி வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் முன்முயற்சியிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் போராட்டங்கள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் பொறுப்பு கூறும் விடயத்தில் நீதி விசாரணைகளை மேற்கொள்வதற்கு உந்து சக்தியாக அமைய முடியும். உந்து சக்தியாக்கவும் வேண்டும்.

உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறி, நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதில் ஐநாவின் பிரேரணைகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் அரசாங்கத்தை ஐநா பிரேரணை உடனடியாக வழிக்குக் கொண்டு வர முடியாமல் போகலாம். ஆனால் உறுப்பு நாடுகளின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நீதியை நிலைநாட்டுகின்ற முயற்சியில் தமிழ்த்தரப்பினர் ஈடுபட முடியும். ஈடுபட வேண்டும். இதற்கான காலம் கனிந்துள்ளதாகவே தெரிகின்றது.