Tamil News
Home உலகச் செய்திகள் ஏழு பேர் விடுதலை தொடர்பில் சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவு -அமைச்சர் சி.வி.சண்முகம்

ஏழு பேர் விடுதலை தொடர்பில் சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவு -அமைச்சர் சி.வி.சண்முகம்

ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து அறிவிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,   இந்த விவகாரம் குறித்து  குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது அவர் முடிவெடுப்பார் என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுதலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என  அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

 கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இது வரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனிடையே, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜன.21-ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’ என்று மத்திய அரசு உறுதியளித்தது.

இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் ஆளுநர் சார்பில் பதிலளிக்கப்பட்ட போது, எழுவர் விடுதலை குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பதில் அளித்துள்ளார். இது குறித்து சட்டரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டரீதியான ஆலோசனை பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்”  என்றார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version