Home ஆய்வுகள் ஏற்கப்படாத ஏதிலி ஏக்கம் – பேராசிரியர். முனைவர் ஆ. குழந்தை

ஏற்கப்படாத ஏதிலி ஏக்கம் – பேராசிரியர். முனைவர் ஆ. குழந்தை

இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு! ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்!! | nakkheeran

ஏதிலிகள் மனிதர்கள் என்றும்,அவர்களது உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலென்று கருதவேண்டாம். – திருத்தந்தை 23 ஆம் யோவான்

போராலும் அரச பயங்கரவாதத்தாலும் ஒவ்வொரு நிமிடமும் 20 மனிதர்கள் ஏதிலிகளாக மாற்றப்படுகின்றனர். இதை மறந்துவிடாமலிருக்க சூன் 20 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் ஏதிலி அவை ‘உலக ஏதிலி நாள்’ என்று அறிவித்தது. இந்த நாள் உலக எதிலிகளின் அவலநிலையைப்பற்றிய நமது புரிதலையும் பரிவையும் மேம்படுத்த பயன்படுகின்றது. அவர்களது வாழ்வை மீட்டெடுக்க அவர்களிடமுள்ள மனஉறுதியை நாம் ஏற்பதற்கு வாய்ப்பு தருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதிலிகளின் ஏக்கத்தை ஏற்கவேண்டுமென்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஏதிலிகளின் உரிமைகளையும், தேவைகளையும், நம்பிக்கைகளையும், அரசியல் விருப்புறுதியையும், பாதுகாப்பையும் நாம் ஏற்கவேண்டும். அவற்றை தருவதற்கான வழிமுறைகளையும் வளங்களையும் பெற உழைக்கத் தூண்டும் நாளாக இந்த ஏதிலி நாள் உள்ளது.

ஏதிலிகளின் அவலநிலையை உலகறிய எடுத்துரைத்து, விழிப்புணர்வு தந்து, பாதுகாப்பாக தஞ்சமடைந்த நாட்டில் வாழவும், அல்லது தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லவும், உழைக்கும் கடமை ஒவ்வொரு மனிதனுக்கு இருக்கிறதென நினைவூட்டும் நாளாக இந்த ஏதிலி நாள் உள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஏதிலி நாளின் மையக்கருத்து

உள்வாங்குதல்(Inclusion) என்பதாகும். பிற நாடுகளிலிருந்து வரும் ஏதிலிகளை தஞ்சம் தரும் நாடுகள் அவர்களை வரவேற்று, அடைக்கலம், உரிமைகள் போன்றவற்றை தந்து தங்களது நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் ஆற்றல்களாக அவர்களை மாற்றவேண்டும் என்பதுதான் உள்வாங்குதலாகும். எவராது எங்களை ஏற்றுக்கொள்வார்களா? பாதுகாப்பு தருவார்களா? உயிர் வாழ உரிமை தருவார்களா? என்ற ஏக்கப்பெருமூச்சு எவரது செவிகளிலும் விழவில்லை.

இந்த உள்வாங்குதல் பல நாடுகளில் விரும்பி நடைபெறுகின்றது. சில நாடுகளில் கட்டாயத்தின் பெயரில் நடைபெறுகிறது. சில நாடுகள் உள்வாங்காமல் துரத்தி அடிக்கின்றனர்.

இந்திய ஒன்றியம் போன்ற உலக நாடுகள் ஏற்கின்றன. இந்தியாவில் உள்ள ஏதிலிகளின் எண்ணிக்கையை பின்வருமாறு காண்போம். ஈழத்தமிழர்கள் 92015, திபெத்தியர்கள் 72291, மியான்மரிலிருந்து 30308, ஆப்கானிசுதானியர்கள் 14466, பிற நாடுகளிலிருந்து வந்த 4653 ஏதிலிகள் இந்திய ஒன்றியத்தில் வாழ்கின்றனர் (ஆதாரம்: (India Factsheet- April 2023. Cfr. Refugees and Asylum-seekers as of 30 April 2023). 2022 ஆம் ஆண்டில் மட்டும் 10.84 கோடி மக்கள் துன்புறுத்துதல், மோதல்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொது ஒழுங்கை கடுமையாக சீர்குலைக்கும் நிகழ்வுகள் போன்றவற்றால் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டனர்.

ஏதிலிகளின் தீர்வின் அவசியம் என்ற மற்றொரு கருத்தையும் இந்த நாள் வலியுறுத்துகிறது. ஏதிலிகளின் பிரச்சினையை தீர்க்க எந்த அரசும் தயாராக இல்லை. ஈழத்தமிழர்களைப்போன்று பல ஏதிலிகளை 30 ஆண்டுகளாக முகாம்களில் வாழ வைப்பது மனித இனத்திற்கு எதிரான குற்றமாகும்.

பிடுங்கி எறியப்பட்ட மக்கள் 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் 1.9 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர். இந்த 10.84 கோடி ஏதிலிகளில் 7. 11 கோடி மக்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். மொத்த ஏதிலிகளில் 52 விழுக்காடு ஏதிலிகள் சிரியாவிலிருந்தும்(65 இலக்கம்(இலட்சம்), உக்ரைனிலிருந்தும் (57 இலக்கம்), ஆப்கானிசுதானிலிருந்தும் (57 இலக்கம்) வருகின்றனர். இந்த ஏதிலிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் அதிகரிக்க, அறிவு, அதிகாரம், நாகரீகம், முதிர்ச்சி போன்றவற்றை படைத்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகின்ற அரசுகள், ஆளும் வர்க்கங்கள் செயல்படுகின்றன.

ஏதிலிகளை உருவாக்குவது காட்டுமிரண்டிதனமாகும். முதிர்ச்சியற்ற செயலாகும். பண்பற்ற குமுகத்தின் அரக்கத்தனமாகும். ஒரு பக்கம் ஏதிலிகளை அதிகரிக்கின்றனர். மற்றொரு பக்கம் ஏதிலிகளை ஏற்றுக்கொண்ட நாடுகள் அவர்களை மீண்டும் அவர்களது தாய்நாட்டிற்கு அனுப்பி வளமாக வாழ வழிகாட்டுவதில்லை. 2022 ஆம் ஆண்டு 32 மில்லியன் ஏதிலிகளில் 2, 04, 500 ஏதிலிகள் மட்டும் மீண்டும் அவர்களது தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

உள்நாட்டு அரசியல் தாக்கத்தாலும் பிற பிரச்சினையாலும் ஏதிலிகளை ஏற்றுக்கொண்ட அரசுகள் தங்களது நாட்டில் குடியுரிமை கொடுத்து ஏதிலிச் சிக்கலை தீர்க்க எவ்வித நடவடிக்கையை எடுக்க முன்வருவதில்லை. சட்டரீதியான பாதுகாப்பு இல்லாமல் வாழும் ஏதிலிகளின் நலவாழ்வும் வாழ்வாதாரங்களும் மிகவும் ஆபத்தானவை, அழிந்துவிடக்கூடியவையாகும். அடைக்கலம் தந்த அரசுகள் தங்களது குடிமக்களின் உரிமைகளை மட்டும் கவனத்தில் கொண்டுள்ளன.

அடித்தள, நடுத்தள பொருளாதாரம் உள்ள நாடுகள் நிரந்தர குடியுரிமை வழங்க தயாராக இல்லை. துருக்கியில் சிரியா ஏதிலிகள், தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் ஏதிலிகள், பாகிசுதானில் ஆப்கானிசுதான் ஏதிலிகள். கென்யாவில் சோமாலியா ஏதிலிகள் எவ்வித சட்ட பாதுகாப்பில்லாமால் வாழ்கின்றனர். ஏதிலி சிக்கலை தீர்க்க பன்னாட்டு நிதி குறைந்துகொண்டே செல்கின்றது. இந்த நாடுகளில் ஏதிலிகள் சட்டரீதியான வேலைகளை செய்ய முடியாமல் அமைப்புசாரா தொழில்களை செய்கின்றனர். இந்த வேலைகளை தேடுவதில் போட்டி வருவதால் மனஇறுக்கம் ஏதிலிகளை ஆட்டிப்படைக்கிறது. ஏதிலிகளின் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு எடுக்காமல் இருந்தால் எதிர்கால வாழ்வை தீர்மானிக்க முடியாமல் திணருகின்றனர்.

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் நாடற்ற மலையக தமிழர்களும், குடியுரிமையற்ற ஈழத்தமிர்களும் நிரந்தர குடியுரிமை கேட்டு 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் குடியுரிமை தர மறுக்கின்றனர். குடியுரிமையற்ற மக்கள் அடிமைகளாகவும், சார்புநிலையில் வாழ்பவர்களாகவும், எதிர்காலத்தையும் வாழ்விடத்தையும் முடிவுசெய்ய இயலாதவர்களாகவும், அவர்களது ஆக்காற்றலை இழந்தவர்களாகவும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் குறுகிய வீடுகள்(10க்கு 8 அளவில்), திறந்தவெளி கழிப்பிடம், குளங்கள், உணவு தானிய கிடங்குகள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து வசதியில்லாத இடங்கள், காட்டுப்பகுதிகள் போன்ற இடங்களில் முகாம்கள் உள்ளன. வேலையின்மை, மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை போன்ற ஆற்றல்படுத்தும் கூறுகள் அதிகம் இல்லை. வாழ்வாதாரமற்ற, போராட உரிமையற்ற, இயக்கங்களை உருவாக்கும் உரிமையற்ற வாழ்வில் ஏதிலிகள் அரசு அதிகாரிகளையும் தொண்டு நிறுவனங்களையும் சார்ந்து வாழும் நிலை உள்ளது. பண்பாடு சீரழிந்து, தங்களது எதிர்கால வாழ்வை இழந்து வாழ்கின்றனர்.

இந்த அவலங்கள் ஆட்சியாளர்களின் கண்களில் படவில்லை. அவர்களது அழுகுரல் ஆட்சியாளர்களின் செவிகளில் கேட்கவில்லை.  சில நேரங்களில் இவற்றை பார்த்து. கேட்டு அமைதியாகி விடுகின்றனர். இரக்கமற்ற இதயங்கள் இருக்கும்வரை ஏதிலிகள் அதிகரிப்பர். கேட்டும் கேட்காதுபோல நடிப்பவர்கள் நடமாடும்வரை நாடற்றவர்கள் உருவாக்கப்படுவர். தன்னலத்திற்காக உரிமைகளை பறிக்கும் ஆட்சியாளர்கள் ஆளும்வரை ஏதுமற்ற ஏதிலிகள் எங்கும் அலைவர்.

ஏற்கப்படாத ஏதிலிகள் எத்தனிக்கும்போது எந்த நாடும் ஏற்றம் பெறாது. மனசாட்சியை மழுங்கடிக்காமல் மறுமலர்ச்சி பெற்று இயற்-மானிட உலகிற்கு உழைப்போம். ஏதிலியற்ற உலகை உருவாக்குவோம். அப்போது பகுத்தறிவாதிகள் வாழும் பாருலகத்தை படைக்க முடியும்.

Exit mobile version