எரிவாயு விநியோகம் நிறுத்தம் – நெருக்கடியில் ஐரோப்பா

ஐரோப்பாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் ரஸ்யாவின் முக்கிய எரிவாயு குழாயில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்து எரிவாயு விநி-யோகத்தை ரஸ்யா நிறுத்தியுள்ளதானது ஐரோப்பிய நாடுகளை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

ரஸ்யாவின் கஸ்போரம் நிறுவனம் நொட்ஸ்றீம்-1 என்ற விநியோக வழியை கடந்த மாதம் 30 ஆம் நாள் முடியுள்ளது. ரஸ்யாவின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அதில் கடுமையாக பாதிப்படைந்த நாடு ஜேர்மனி தான்.

ரஸ்யாவின் நடவடிக்கை என்பது எரிவாயுவை பேரம்பேசும் பொருளாக பயன்படுத்தும் நடவடிக்கை என குற்றம் சுமத்தியுள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்.

ரஸ்யாவின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், பணவீக்கமும் அதிகரித்து செல்கின்றது.

முதலில் 3 தினங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவித்த ரஸ்யா தற்போது அதன் கால எல்லையை அதிகரித்துள்ளது. ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் ரஸ்யா தனது கால எல்லையை நீடித்துள்ளது.

நொட்ஸ்றீம்-1  என்ற விநியோக வழி ஊடாக நாள் ஒன்றிற்கு 170 மில்லியன் கன மீற்றர் எரிவாயு விநியோகம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.