வடபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை இரு வருடங்களில் விடுவிப்பேன் – ரணில் மீண்டும் வாக்குறுதி

சஜித் பிரேமதாசா தலைமையிலான தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் எதிர்-வரும் இரண்டு வருடங்களில் வடபகுதியில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கப்போவதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடபகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல்போனவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முகமாக தமது அரசு அங்கு அலுவலகம் ஒன்றை திறந்துள்ளதாகவும், வடபகுதியில் உள்ள பெண்களை முன்னேற்ற முயற்சி எடுக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது கடந்த ஐந்து வருட ஆட்சியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றவே மீண்டும் ஒரு ஆட்சி தமக்கு தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதுடன், போர்க்குற்ற விசாரணைகளைக் கூட நீர்த்துப்போகச் செய்ததே வரலாறு ஆகும் என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கேட்கப்படும் இரண்டு வருட அவகாசமும், மற்றுமொரு ஏமாற்றும் படலம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.