Tamil News
Home செய்திகள் எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’-மட்டு.நகரான்

எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’-மட்டு.நகரான்

எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’இந்த குரல் யுத்த காலத்தில் வெளிவந்த குரல்கள் அல்ல. இது யுத்தம் மௌனிக்கப்பட்டு 14வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவந்த குரலாகும்.

இவ்வாறான குரல்கள் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்த குரல்களை செவிமடுக்கவும் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவும் யாருமற்ற நிலைமையே மட்டக்களப்பில் உள்ள பல பிரதேசங்களின் தமிழ் மக்களின் நிலைமையாகவுள்ளது.

கிழக்கு மாகாணம் தொடர்ச்சியான பாரியளவிலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. வெறுமனே நாங்கள் தமிழ் தேசிய அரசியலை முன்நகர்த்துவதில் காட்டும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை தமிழ் தேசிய அரசியலில் உள்ள மக்களின் நிலைமையினை கண்டறிவதற்கு தவறிவருகின்றோம்.

தமிழ் தேசிய விடுதலையின் ஆயுதப்போராட்டத்தில் கிழக்கு மாகாண போராளிகளின் பங்களிப்பு என்பது கணிசமானதாகவேயிருந்தது. வடக்கானாலும் கிழக்கானாலும் ஆயுதப்போரின் வெற்றியில் கிழக்கு மாகாண போராளிகளின் போராட்ட திறனை யாரும் குறைத்துமதிப்பிடமுடியாது. அதேபோன்று இழப்புகளும் கிழக்கு மாகாணத்திற்கு அதிகளவில் இருந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இவ்வாறான நிலையில் இந்த ஆயுத விடுதலைப்போராட்டத்தில் படுவான்கரையில் உள்ள மக்கள் பெருமளவான அர்ப்பணிப்புகளை செய்திருக்கின்றார்கள். அந்த அர்ப்பணிப்புக்கான உரிய கௌரவம் இன்று வழங்கப்படுவதில்லையென்ற கவலை தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் அனைத்து கிழக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் இன்றும் இருந்துவருகின்றது.

இன்று தமிழ் தேசிய அரசியலை வைத்து வயிறு வளர்ப்பவர்களும் அதனை வைத்து வைத்து வயிறு வளர்த்தவர்களும் சுகபோகங்களை அனுபவித்துவரும் நிலையில் அந்த தமிழ் தேசியத்திற்காக போராடியவர்களும் அந்த போராட்டத்திற்கு அரணாக இருந்த மக்களும் ஏதிலிகளாக வாழும் நிலைமையினையே இன்று நாங்கள் காணமுடிகின்றது.

தமிழ் தேசியத்தினை தமது மூச்சாக கொண்ட மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் போது அவர்கள் மத்தியில் ஏற்படும் விரக்திநிலையே மாற்று கட்சிகளை நோக்கி நகரவைக்கின்றது. இதுவரையில் இது தமிழ் தேசிய பரப்பில் அரசியல் செய்யும் சக்திகளுக்கு புரியாமல் இருப்பது கவலையான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியாக காணப்படும் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியில் உள்ள கித்துள்  வெலிக்காண்டி, உறுகாமம் , கரடியனாறு, புல்லுமலை, மாவளையாறு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர். செங்கலடி-பதுளை வீதியில் உள்ள தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களாகவேயிருந்தனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் சிங்கள இனவாததத்தின் உச்சத்தினால் மலையப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறி அப்பகுதிகளை பாதுகாத்துவந்த மக்களாகும்.

போராட்டத்தில் இவர்களின் பிள்ளைகளின் பங்களிப்பு என்பது பெரியளவிலிருந்துவந்தது.ஆனால் இன்று இந்த மக்கள் கவனிப்பார் அற்றவர்களாகவேயிருந்துவருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு காலம்காலமாக ஆளாகிவருகின்றனர்.இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம்,மீன்பிடி,கால்நடை வளர்ப்பு,சேனைப்பயிர்ச்செய்கை போன்ற வாழ்வாதார தொழில்களிலேயே ஈடுபட்டுவருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த மக்களின் அடிப்படை தேவைகள் என்பது யுத்தம் நிறைவடைந்து 14வருடங்களைக்கடந்தும் பூர்த்திசெய்யப்படாத நிலையில் மிகவும் கஸ்டமான சூழ்நிலையிலேயே தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக காட்டுயானையின் தாக்குதல்களினால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இதற்கு தீர்வினைப்பெற்றுத்தருமாறு பல்வேறு தடவைகள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைத்தபோதிலும் இதுவரையில் கவனம் செலுத்தாத நிலையிலேயே அப்பகுதியினை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளாக கருதப்படும் இப்பகுதியில் 95வீதமான மக்கள் தமிழர்களாகவுள்ள நிலையில் இப்பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்காணப்படுவதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

‘எல்லைப்பகுதியான எங்களுக்கு எந்த உதவியும் இல்லை.ஓலைக்குடிசையில் எங்களது பிள்ளைகளை வைத்துக்கொண்டு மின்சாரம் இல்லாத நிலையில் மிகவும் கஸ்டத்துடன் வாழ்கின்றோம்.இவ்வாறான நிலையில் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்துவருகின்றது.இரவு வேளைகளில் உயிரை கையில் பிடித்தே கழித்துவருகின்றோம்.எங்களது பிள்ளைகளை பாதுகாக்க நாங்கள் இரவு பகலாக கஸ்டப்படுகின்றோம்.

யானைகள் புகுந்தால் இலகுவில் எங்களது வீடுகளை அழித்துவிடுகின்றது.பிள்ளைகளை அடித்துக்கொல்கின்றது.எங்களது நிலைமை ஏனைய பகுதியில் வாழும் அதிகாரிகளுக்கும் விளங்குவதில்லை, அரசியல்வாதிகளுக்கும் விளங்குவதில்லையென’ புல்லுமலை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற பெண் தெரிவித்தார்.

‘நாங்கள் விவசாயத்தினையும் சேனை பயிர்ச்செய்கையினையும் நம்பியே வாழ்கின்றோம்.நெல் இல்லாவிட்டால் உணவு உண்ணமுடியாது.விவசாயத்தை காட்டு யானைகள் அழிக்கின்றன.வயல் நிலங்களை காட்டு யானைகள் அழிக்கின்றது அவற்றிலிருந்து பாதுகாக்க காவலாளிகளை நியமித்தால் அவர் காவல் செய்யும்வாடியை உடைக்கின்றது,அவரையும் தாக்கி கொல்கின்றது.நாங்கள் தினமும் யானைகளுடன் போராடியே எமது உயிர்களை பாதுகாத்துவருகின்றோம்’ என இங்கு கருத்து தெரிவித்த நடராஜா என்னும் விவசாயி தெரிவிக்கின்றார்.

இதேபோன்று புல்லுமலை மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் தலைவி சுலோஜினி கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடிவருகின்றோம். எங்களது பகுதியானது மட்டக்களப்பின் எல்லைப்பகுதியாக காணப்படுகின்றது. இதன்காரணமாக இங்குள்ள தமிழ் மக்கள் தமது எல்லைகளை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே இவ்வளவு கஸ்டங்களையும் தாங்கி வாழ்கின்றனர். இங்குள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலைமையும் காணப்படுகின்றது. பாடசாலைசெல்லும் பிள்ளை உயிரோட வீடு வந்துசேருமா என்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் இந்த பிரச்சினையிருக்கவில்லை.யுத்தம் முடிஞ்சபின்னர்தான் இந்த யானை பிரச்சினை இருக்கின்றது.இங்கு மக்களுக்கு அச்சுறுத்தலாகயிருக்கும் யானைகள் சிங்கள பகுதிகளிலிருந்து இங்குகொண்டுவந்து விடப்பட்டுள்ளன.எங்கள் மீது யானைகள் ஏவிவிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாரும் கவனம் செலுத்துவதாகயில்லை.

நாங்கள் அதிகாரிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரையில் பலரிடம் இந்த பிரச்சினைகளை கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இங்குள்ள யானைகள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும்.எங்களுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவேண்டும்.எமது பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் நாங்கள் அச்சமின்றிய சூழலில் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறினார்.

உண்மையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்ன நோக்கத்திற்காக நடைபெற்றதோ அந்த நோக்கம் இன்று மழுங்கடிக்கப்படுகின்றது.ஆனால் சிங்கள தேசம் எமது மண்ணை அபகரிப்பதற்கு முன்னெடுக்கும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் இன்னும் வேடிக்கைபார்க்கும் நிலைமையில்தான் இருக்கின்றோம். நாங்கள் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கதைத்து அரசியல்செய்வதனால் மட்டும் அதனை அடையமுடியாது.இவ்வாறான எல்லைப்பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டும்.அதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றமுன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Exit mobile version