எக்னெலிகொட தொடர்பில் மட்டுமல்ல அங்கிருந்த தமிழர்கள் தொடர்பாகவும் தொடர்பாகவும் விசாரணைகள் வேண்டும் – இரா.சிறீஞானேஸ்வரன்

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசு தரப்பு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று (14) ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘‘2019. ஒகஸ்ட் 10ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் கிரித்தலை இராணுவ முகாமில் பணியாற்றிய லெப்டினட் கேணல் சம்மி அர்ஜூன் குமாரரத்ன உட்பட ஒன்பது சந்தேகநபர்களுக்கு எதிராக எக்னெலிகொட தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்து நீதாய நீதிமன்றில் அக்குற்றச்சாட்டை விசாரணைக்கு உட்படுத்துமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்‘‘

வழக்குத் தொடுனர்களின் தரப்பானது குறித்த இராணுவ முகாமானது பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என்றும், ஆரம்பத்தில் அங்கு ஒன்பது விடுதலைப் புலிகள் உயிருடன் தடுத்து வைக்கபட்டிருந்தனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போது சுமதிபால சுரேஸ்குமார் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சரணடைந்து குறித்த இராணுவ முகாமில் இராணுவப் புலனாய்விற்கு ஒத்துழைப்பு நல்கியமையும், அவர் எக்னெலிகொட வுடனும் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்னெலிகொட தனது கழிவகற்றல் கடமைகளைக்கூடச் செய்யமுடியாதளவு தாக்குதலுக்குள்ளாகி சிறைக்கூண்டில் இருந்ததை மற்றொரு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேக நபரான எதிர்மன்னசிங்கம் அருச்சந்திரன் என்பவர் தெரிவித்திருந்ததாக வழக்குத் தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கின் மிகப் பிரதானமான சாட்சியாக அரசு தரப்புச் சாட்சியாக மாறியுள்ள இராணுவ அதிகாரி ஜெயசுந்தர முதியான்சலாகே ரண்பண்டா எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக தனது சாட்சிகளை வழங்கியுள்ளார்.

எனவே மேற்கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த முகாமில் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெளிவாகின்றது.

அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ள ரண்பண்டா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒன்பது இராணுவத்தினர் மற்றும் கிரித்தலை இராணுவ முகாமின் புலனாய்வுப் பதிவுகளைக்  கையேற்ற இராணுவ அதிகாரி மேஜர் பீரிஸ் ஆகியோரிடம்  மேலும் விசாரணைகளைத் தொடர்வதன் மூலம் எத்தனை தமிழ் இளைஞர்கள் அங்கு தடுத்து வைக்கப்படட்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பது பற்றி அறிந்துகொள்ள முடியும் என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார்.