எக்காரணத்தைக் கொண்டும் தமிழினத்தை மத, சாதி, பிரதேச அடிப்படையில் பிரிப்பதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் – மனோ

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள மதரீதியான பிரச்சினைகள் தமிழினத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.எக்காரணத்தைக் கொண்டும் தமிழினத்தை மத, சாதி, பிரதேச அடிப்படையில் பிரிப்பதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன். அதேபோன்று தமிழ் மொழி, எங்கள் கலாசாரம், வரலாறு ஆகியவற்றை எவருக்கும் விலை பேசி விற்க மாட்டோம் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ‘தெய்வீக சேவைத் திட்டம்’ யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மனோ கணேசன் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

நான் கன்னியா, நீராவியடி, திருக்கேதீஸ்வரம், உகந்தை முருகன் ஆலயம் ஆகியவற்றுக்குப் போனேன். இப்போதும் போய்க் கொண்டுதான் இருக்கின்றேன். நான் அவ்வாறு செல்கின்ற காரணத்தினாலேதான் அந்தப் பகுதியில் நடக்கக் கூடிய நிகழ்வுகளையும், அசம்பாவிதங்களையும், அட்டூழியங்களையும், ஆக்கிரமிப்புக்களையும் நாடு முழுவதும் அறியக் கூடியதாக உள்ளது

இப்பொழுது கன்னியாவிலே வெந்நீரூற்றுக் கிணற்றுக்கு அருகாமையில் இருக்கக் கூடிய விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டுள்ளது. அது இப்போது இடிக்கப்பட்டது அல்ல, கடந்த 2011 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டுவதற்காக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் அகழ்வாராய்ச்சித் திணைக்களம் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது வர்த்தமானியில் அகழ்வாராய்ச்சிக்குரிய இடமாக பிரகடனப்படுத்தியிருக்கின்றது. அது இப்போது அல்ல, இவை எல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தவைதான்.

அங்கே சென்று திருகோணமலை மாவட்டச் செயலகத்திலே மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் அழைத்து ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தேன்.

அதன் மூலமாக அகழ்வாராய்ச்சி இடத்திற்கு மேலே எந்தக் காரணம் கொண்டும் பௌத்த விகாரை கட்ட முடியாது என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். அது மட்டுமல்ல, அந்த வளவுக்குள்ளேயே வெந்நீரூற்று விநாயகர் ஆலயத்தைக் கட்டுவதற்கும் அமைச்சு நிதி உதவி செய்யத் தயாராக உள்ளதென்பதை அறிவித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றோம். இந்நிலையில்தான் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் எழுதியதன் அடிப்படையிலே கன்னியா விநாயகர் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரையொன்றைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக செய்திகள் காதுக்கு எட்டின. அப்போது நான் உடனடியாக திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமாரவை தொலைபேசியில் அழைத்து நாங்கள் எடுத்த தீர்மானத்தை மீறுவீர்களானால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையக் கூடிய பாதகங்களுக்கு, எதிர்விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வருமென்று கடுமையாகச் சொன்னேன்.

இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (15) யாழ்ப்பாணம் வருகின்றார். அவரிடம் இங்கிருக்கும் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே போல இங்கிருக்கும் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதனும் ஜனாதிபதியிடம் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கும் மேலாக இங்குள்ள வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் ஐனாதிபதியிடம் இதனை எடுத்து விளக்க வேண்டும். அவ்வாறு அனைவருமாக இணைந்து இதனை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமானது.

அதைவிடுத்து, மனோகணேசனை மாத்திரம் குறை சொல்வதற்கோ அல்லது மனோகணேசனை மாத்திரம் சுட்டிக்காட்டுவதற்கோ இந்த விடயங்களைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதும் சரியல்ல. அது பிழையானது.

இப்பிரச்சினைகள் தொடர்பில் சரியானதொரு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆகவே இந்த விவகாரத்தில் என்னுடன் சேர்ந்து கூட்டாகச் செயற்படுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடிய தமிழ் உறுப்பினர்களும் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”.