ஊர் பெயர்களை தமிழைப் போன்றே ஆங்கிலத்தில் எழுத அரசாணை

தமிழகம் முழுவதும் சில இடங் களில் ஊர் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரியாகவும், ஆங்கிலத்தில் வேறு மாதிரியாகவும் உச்சரிக்கப் படுவதோடு, ஆங்கிலத்திலும் வேறு மாதிரியாக எழுதப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழில் உச்சரிப் பதைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிப்பதோடு, அவ்வாறே எழுத தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வு மேற்கொண்டு, 1,018 ஊர்களின் பெயர்களைத் திருத்தம் செய்து, அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், எழுத வேண்டும் என்பது தொடர்பாக நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது.

அதன்படி சென்னை எழும் பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, தூத்துக்குடி, செஞ்சி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களின் பெயர்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும்,  தமிழ்நாடு என்பதை ‘டமில்நாடு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து தமிழைப் போன்றே ஆங்கிலத்திலும் ‘THAMIZHNADU’ என்று எழுத, உச்சரிக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக உலகத் தமிழ்க்கழகத்தின் தலைவரும் மருத்துவருமான அ.செந்தில் கூறியதாவது:  தமிழ்நாடு என்ற பெயர் ஆங்கிலத்தில் ‘டமில்நாடு’ (TAMILNADU) என உச்சரிக்கப் படுகிறது. அது, ‘THAMIZHNADU’ என்று எழுத, உச்சரிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று தமிழகத்தின் மிகப்பெரிய சுற்று லாத் தலங்களான உதகமண்டலம்(ஊட்டி), நீலகிரி (நீல்கிரிஸ்) போன்ற முக் கிய ஊர்களின் பெயர்களும் திருத்தம் செய்யப்படவில்லை. அரசு இதையும் இத்தருணத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.

சட்டப்பேரவையில் தீர்மானம்

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் ம.சி.தியாகராசனிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டின் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றுவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னரே மாற்றம் செய்ய முடியும். அதே போன்று உதகமண்டலம், நீலகிரி திருத்தங்கள் தொடர் பாக அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் திருத்தம் செய்து வெளியிடப்படும்” என்று தெரி வித்தார்.