உலகெங்கும் தமிழர்களின் கலை வடிவங்களைக் காவிச்சென்றார் மரியசேவியர் அடிகளார்- யாழ். தமிழ் சங்கம்

திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார் என அவரது மறைவையொட்டி யாழ்ப்பாண தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலை அமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற தனித்துவம் ஈழத்தின் கலையுலக மரபில் அவருக்கே உரித்தான தனித்துவம்.

அவரால் உருவாக்கப்பட்ட பல கூத்துருவ நாடகங்கள் நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றுச் சம்பவங்களை மையமாக வைத்து எமது இனம் அண்மையில் சந்தித்த வலிகளைக் குறியீடுகளாக்கிப் பேசும் தனித்துவ வல்லமையைக் கொண்டிருந்தமையை அவரது கலைப்படைப்புக்களை உன்னிப்பாக கவனிக்கும்போது அவதானிக்கக்கூடிய விடயம். கலையுடன் வாழ்தல், கலைக்காக வாழ்தல், என்பவற்றை தன் வாழ்வின் இலட்சியங்களாக வரித்துக்கொண்ட இவர் இறுதிக் கணம் வரை கலைக்காகவே வாழ்ந்தார். குறிப்பாக கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் எனும் புனிதநாள்களில் யேசு பிரானின் திருப்பாடுகளின் காட்சிகளை நாடகங்களாக வருடம் தோறும் உருவாக்கிய அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்கள் அத் தவக்கால நாள்களில் ஒன்றிலேயே தன் மண்ணுலக வாழ்வைத் துறந்தமை மாண்புக்குரிய விடயம்.

மரியசேவியர் அடிகளாரின் முதன்மைப்பண்பாக இருந்தது, தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை முதன்மைப்படுத்துவதற்கு முன்னால் தன்னை ஒரு தமிழராக என்றும் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதாகவேயிருந்தது. இத்தகைய பண்பு இன்று பலருக்கும் எடுத்துக்காட்டான பண்பாகும். அதற்கு இலக்கணமாக அவர் சைவசிந்தாந்தத்துறையில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஆழமான புலமையையும் குறிப்பிடமுடியும். சைவசித்தாந்த துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற அவர் அத் துறைசார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் சர்வதேச அறிஞர்களின் கவனத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார். இன மத நல்லிணக்கத்தின் வடிவமாக கலைகளைக் கையாண்ட பெருமையும் அடிகளாரைச் சாரும். சிங்கள மக்களின் கலைவடிவங்களைப் பயிலும் ஆர்வத்தை தமிழர்களிடமும் தமிழர்களின் கலை வடிவங்களைப் பயிலும் ஆர்வத்தை சிங்கள இளையவர்களிடமும் விதைத்தவர் அவர். இவ்வாறு பல்வேறு வழிகளில் முன்னுதாரணமாகச் செயற்பட்ட அவர் தமிழர்களின் கலைவடிவங்கள் பெரும்பாலானவற்றை காலம்கடத்தும் கடத்துவதற்காக நிறுவனக் கட்டமைப்புக்களைத் தாபித்து அவற்றை ஸ்திரப்படுத்தியவர்.

எமது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மீதும் அதன் பணிகள் மீதும் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்த மரியசேவியர் அடிகளாரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எங்கள் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம்.