Tamil News
Home உலகச் செய்திகள் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் இது வரையில் 7 கோடியே 97 இலட்சத்து 43 ஆயிரத்து 029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 17 இலட்சத்து 49 ஆயிரத்து 606 பேர் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில், உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரசுக்கு புதிதாக 7 அறிகுறிகள் தெரிவதாக பிரித்தானிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸுக்கு மாடர்னா  கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாடர்னா மருத்துவ நிறுவனம் தரப்பில், “பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட  கொரோனா வைரஸுக்கு மாடர்னா  கொரோனா தடுப்பு மருந்து பயனுள்ளதாக உள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இது பயனளித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து மாடர்னா தடுப்பு மருந்து எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட  கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா,சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரம் பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களினால் இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,46,846 ஆக உயர்ந்துள்ளது. வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,092 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version