Home ஆய்வுகள் உலகத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்த 2020 இன் மே தினம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உலகத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்த 2020 இன் மே தினம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மே முதலாம் நாள் உலகத் தொழிலாளர் தினம், ஆனால் இந்த ஆண்டு அது தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் அனர்த்தம் மிக்க நாளாக மாற்றம் பெற்றுள்ளதுடன், உலகம் எங்கும் அமைதியாகவே இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இல்லையேல் குடியரசுகள் இல்லை, வேலை தான் மக்களின் சுதந்திரம், தன்னாட்சி மற்றும் சுயமரியாதைக்குரிய நிபந்தனை என தனது மே தின உரையில் இத்தாலிய பிரதமர் செர்ஜிகோ மற்றரெலா கடந்த வெள்ளிக்கிழமை (1) தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் தொழில்களை இழக்கும் கட்டத்தில் உள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் 30 மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளனர்.

பிரித்தானியாவிலும் இது 6.5 மில்லியனாக இருக்கும் என எசெக்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் எதிர்வரும் மூன்று மாதங்களில் 15 இலட்சம் மக்கள் வேலையிழக்கலாம் என சிறீலங்கா பணியாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்கா தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமாகிய கோவிட்-19 நோயானது மார்ச் மாதமளவில் உலகின் பொருளாதாரத்தை முற்றான முடக்க நிலைக்கு கொண்டு வந்திருந்தது. இன்று வரை ஏறத்தாள 250,000 மேற்பட்டவர்களை பலிவாங்கிய இந்த நோய் 3.5 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.

உயிரிழப்புக்களுக்கு அப்பால் உலகம் சந்தித்துள்ள பொருளாதார வீழச்சியே மிகப்பெரிதாக கருதப்படுகின்றது. இந்த பொருளாதார வீழ்ச்சி மக்களை கடுமையாக பாதிப்பதுடன், பட்டினிச் சாவுகள் மூலம் மேலும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம் என கருதப்படுகின்றது. 820 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குவார்கள் என ஐ.நா கடந்த வாரம் தெரிவித்துள்ளது. இதில் ஏற்கனவே உணவு நெருக்கடிக்குள் உள்ள 110 மில்லியன் மக்களும் உள்ளடங்கியுள்ளனர்.merlin 171332871 10538b21 1265 4d6f 810a 30c5ecaf87dc articleLarge உலகத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்த 2020 இன் மே தினம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சோமாலியா, கென்யா மற்றும் எதியோப்பியாவில் உள்ள 12 மில்லியன் மக்கள் மிகப்பெரும் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறீலங்காவின் வறுமையும் 43 விகிதம் அதிகரிக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழச்சி என்பது 1930 களில் எற்பட்டதை விட மிகவும் மோசமானதாகும். உலகின் பொருளதார வல்லரசான அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 3 மாதத்தில் 4.8 வீகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களில் அது மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது.

எனினும் இந்த பொருளாதா வீழ்ச்சி 12 விகிதமாக அதிகரிக்கும் எனவும், அது 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட வீழ்ச்சியை விட 3 மடங்கு அதிகம் என்பதுடன், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இடம்பெற்ற மிகப்பெரும் சரிவு எனவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஆய்வாளர் கிரெகரி டாகோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் 3.8 விகிதம் வீழச்சி கண்டுள்ளது. இது 1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் எற்பட்ட மிகப்பெரும் வீழ்சியாகும். அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள முக்கிய நாடுகளான ஜேர்மனி 6 விகித சரிவையும், பிரான்ஸ் 5.8 விகித சரிவையும், இத்தாலி 4.7 விகித மற்றும் ஸ்பெயின் 5.2 விகித சரிவையும் சந்தித்துள்ளன.

சீனாவின் பொருளாதாரமும் 6.8 விகிதம் சரிந்துள்ளது. இது கடந்த 28 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற சரிவாகும். சீனாவின் பொருளாதார சரிவு உலகப் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.

அதே சமயம், உலகப் பொருளாதாரம் 3 விகிதம் வீழ்ச்சி காணலாம் என்பதுடன், உலகின் வர்த்தகத்துறையும் 32 விகித வீழ்ச்சியை காணும் என உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி என்பது ஒரு சில துறைகளை மட்டும் பாதிக்கவில்லை, உலகில் உள்ள எல்லா துறைகளையும் பாதித்துள்ளதுடன், உலகின் மொத்த பொருளாதாரத்தையும் முற்றான முடக்க நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

வங்கி, சில்லறை வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, பங்குச் சந்தை, வான் போக்குவரத்து, சுற்றுலாத்துறை, உற்பத்தித்துறை என எல்லா துறையிலும் கடும் பாதிப்புக்களை எற்படுத்தியுள்ளது.

வான் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் பொயிங் நிறுவனம் 16,000 பேரை பணிநீக்கம் செய்ததுடன், 641 மில்லியன் டொலர்கள் இழப்பையும் அறிவித்துள்ளது. 2800 விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டுள்ளதால் புதிய விமானங்களுக்கான கொள்முதல்களும் இடை நிறுத்தப்படடுள்ளன. அதேபோல பிரிட்டிஸ் வான் போக்குவரத்து நிறுவனமும் ஏறத்தாள 1,200 பேரை பணி நீக்கம் செய்துள்ளதுடன், 500 மில்லியன் டொலர்கள் இழப்பை அறிவித்துள்ளது.

வான் போக்குவரத்து 72 விகிதம் சரிவைச் சந்திக்கும் எனவும் அதன் இழப்பு 273 பில்லியன் டொலர்கள் எனவும் ஐ.நாவின் வான் போக்குவரத்து சிறப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தைகளில் உள்ள நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் அரைவாசியாக குறைந்துள்ளன. தற்போது பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள போதும் எத்தனை நிறுவனங்கள் தப்பிப் பிழைக்கும் என்பதே மிகப்பெரும் சவால்.

அதாவது தற்போதைய கோவிட்-19 இன் நெருக்கடி என்பது உலக ஒழுக்கில் மிகப்பெரும் மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்றே நம்பப்படுகின்றது. ஏனெனில் தற்போதைய உலக ஒழுங்கு பொருளாதாத்தை முதன்மைப்படுத்தியே இயங்கி வருகின்றது. அது மட்டுமல்லாது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் அதன் மக்களும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை பல வருடங்கள் எதிர் நோக்கலாம், அதன் மூலம் பெருமளவு உயிரிழப்புக்கள் ஏற்படலாம் எனவும் நம்பப்படுகின்றது. ஏனெனில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகம் மீள்வதற்கு 7 வருடங்கள் எடுத்ததாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போதைய இழப்பு 2008 ஆம் ஆண்டை விட பல மடங்கு அதிகம் என்று அவர்கள் கணிக்கின்றனர். அதாவது பொருளாதார வீழ்ச்சி என்பது பணியாளர்களை அதிகம் பாதிக்கும், பணியாளர்களின் துன்பம் என்பது உலக நாடுகளின் குடியாட்சியை பாதிக்கும் அதனைத் தான் இத்தாலிய பிரதமர் தனது மே தின உரையில் கூற வந்துள்ளார்.

Exit mobile version