உறுதிமொழிகளை இலங்கை மீறியதால்தான் அமெரிக்க பிரேரணை – விக்னேஸ்வரன்

இலங்கை அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறி செய்யாது விட்டமையால்த் தான் அமெரிக்காவில் காங்கிரஸ் கூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

உறுப்பினர் ரொஸ் தம் சார்பிலும் மற்றைய உறுப்பினர் நால்வர் சார்பிலும் இந்தக் முன்கூட்டத் தீர்மானம் முன்வைத்து அது வெளிநாட்டலுவல் குழுவிற்குத் தற்போது பாரப்படுத்தப்பட்டுள்ளது.

எம்மைப் பொறுத்த வரையில் நாம் இதுகாறும் வலியுறுத்தி வந்ததையே காங்கிரஸ் முன் கூட்டத் தீர்மானமாக சமர்ப்பித்துள்ளனர். அண்மையில் நாம் நடத்திய ‘பறிபோகும் எமது வடகிழக்குக் காணிகள்’ பற்றிய மெய்நிகர்கூட்டம் கூட தீர்மானத்தினை முன்னிலைப்படுத்த உதவியிருக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனென்றால் ரொஸ் குறித்த மெய்நிகர் கூட்டத்தை மிக உன்னிப்பாகச் செவிமடுத்தார் என்று அறிகின்றேன். இந்தத் தீர்மான வரைவு நடந்ததையே வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அரசாங்கம் செய்வதாக வாக்களித்துப் பின்னர் நடைமுறைப்படுத்தாதனவற்றையே குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் சபையின் 2017 ஆண்டின் 30/1 தீர்மானம் முன்னர் இலங்கை செய்வதாக வாக்களித்தவற்றையே மேலும் உறுதிப்படுத்தியது. அவையாவன –

1. பொதுநலவாய நாடுகளின் மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் மேலும் விசாரணையாளர்களைக் கொண்டு பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஒரு பொறிமுறையாக விசேட நீதிமன்றமொன்றை உருவாக்குவது.

2. உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை உருவாக்குவது.

3. காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஒரு அலுவலகத்தை உருவாக்கல்.

4. மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்க பாதிக்கப்பட்டோரின் நிவாரணம் பற்றிய அலுவலகத்தை உருவாக்கலும் நிறுவன ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதும்.

5. முரண்பட்டிருக்கும் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்தல்
ஆகவே இவை பற்றி அப்போதிருந்த அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பின்னர் புதிய அரசாங்கம் வந்த பின் குறித்த 30ஃ1 தீர்மானம் இலங்கையால் கைவாங்கப்பட்டது.

இதுபற்றிக் கூறி புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் குறித்த தீர்மானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

1. போர்க்குற்றம் இழைத்தவர்கள் அரசாங்கத்தால் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை.

2. நீதிமன்றங்களால் போர்க்குற்றம் புரிந்தவர் என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு அளித்தமை.

3. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதியின் கைகளுக்கு அதிகாரம் முற்று முழுதாகச் சென்றடைய வழிவகுத்துள்ளமை.

4. போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரணை செய்யாது தடுத்து வைத்துள்ளமை.

5. பெரும்பான்மையினரின் அதிகாரங்களைப் பெருக்கி வைத்து தனித்துவமாக அவர்கள் சார்பில் அரசாங்கம் நடத்தி வருவது.

6. பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் சதா கண்காணித்து வர நடவடிக்கைகள் எடுத்துள்ளமை.

7. படையினரைக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரானவர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும்.
இலங்கை அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறி செய்யாது விட்டமையால்த் தான் இந்தக் கூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் இதுகாறும் கொடுத்து வந்துள்ள உறுதி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியே இந்தக் கூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதால் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படலாம், சமாதானம் நிலைநாட்டப்படலாம் என்றும் கருதப்பட்டுள்ளது.

தீர்மானத்தில், போர் முடிந்து 12 வருடங்கள் ஆகிவிட்டுள்ளமை பற்றியும், போரில் இறந்தவர்களை நினைவுறுத்தி வாழும் மற்றவர்களின் மீள் நிர்மாணமுயற்சிகளுக்கு உதவ முன்வந்துள்ளமை பற்றியும், 2021ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் 46ஃ1 ஆம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியே மேற்படி கூட்டத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விசாரணைகள் நடைபெறாத வரையில் தம்மைப் பற்றி தமக்கு எதிரானவர்கள் அநியாயமாகப் பழி சுமத்துகின்றார்கள் என்று தொடர்ந்து கூறி வரலாம். ஆனால் விசாரணைகள் நடந்தால் உண்மை புலப்பட்டு விடும். அதனால்த்தான் சாட்சிகள் இன்றி போர் நடத்திய அரசாங்கம் விசாரணைகளுக்கும் சர்வதேச மக்களின் கண்டனங்களுக்கும் அஞ்சுகின்றது.

உண்மையில் இலங்கை போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மனிதாபிமான முறையில் தனது மக்களை, முக்கியமாகத் தமிழ் மக்களை, நடத்தி வந்திருந்தால் அது ஏன் இவ்வாறான கூட்டத் தீர்மானங்களுக்குப் பயப்பட வேண்டும்? எதற்காக சீனா போன்ற நாடுகளிடம் மன்றாடித் தஞ்சம் புக வேண்டும். குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கின்றது.

நான் குறித்த கூட்டத்தீர்மானத்தை வரவேற்கின்றேன். காலக்கிரமத்தில் இலங்கை சர்வதேச குற்றவியல் மன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் வாக்கெடுப்பு விரைவில் ஐக்கிய நாடுகளால் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்கு முன்னோடியாகவே மேற்படி கூட்டத் தீர்மானத்தைப் பார்க்கின்றேன் என்றார்.