‘உயிர் ஆயுத ஆய்வுக்கூடம்’ வைத்துள்ளதா சீனா? உலகை பயமுறுத்தும் புதிய தகவல்

கொரோனா வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்களை இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தி வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 200 ஆக அதிகரித்துள்ளது. 7000 பேர் வரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், அவர்களில் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது.

சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. சீனாவின் மத்திய நகரமான இங்குதான் கொரோனா வைரஸ் நோயாளியும் கண்டறியப்பட்டார். காற்றில் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் வுகான் மாகாணத்திலிருந்து சீனாவின் பிற மாகாணங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருவதாகவும் இதுவரை 14 நகரங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் பரவுவதைத் தடுக்க வுகான் உட்படப் பல நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்துகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்களை இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தி வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம் எனப்படும் அவர், “உலக நாடுகளுக்குத் தெரியாமல் சீனா பயோ-வெப்பன் (உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தியிருந்தது. மத்திய நகரமான வுஹானில் இதற்கான ஆய்வுக்கூடங்களை சீன அரசு உருவாக்கி நடத்தி வந்தது.

இங்கு கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும். ஒருகட்டத்தில் பயோ-வெப்பன் தயாரிப்பு குறித்து உலகநாடுகளுக்கு தெரியவந்ததும் `உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுக்கூடம் எங்களிடம் இல்லை’ என்று சீனா தெரிவித்தது. ஆனால் இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து காரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன். கடந்த வருடம் ஜூலையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவில் வுஹான் நகரில் 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதில் ஒரு ஆய்வகத்தில் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன என்று எனக்குத் தகவல்கள் கிடைத்தன” என்று கூறியவர், “இந்த ஆய்வுகூடத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுப் பரவியிருக்கலாம் அல்லது ஆய்வுகூடத்தில் ஏதேனும் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பரவியிருக்கலாம். ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இவரின் குற்றச்சாட்டை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள சீனாவின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு அமைப்பின் இயக்குநர் கவோ பு, “அது அமெரிக்காவின் விஷமப் பிரச்சாரம். வுஹான் நகரின் மிகப்பெரிய வீட்டு விலங்குகள், இறைச்சி சந்தையில் கரோனா வைரஸ் உருவாகியிருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மற்றபடி இதில் வேறு ஏதுமில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார். இந்தப் புகார் உலகநாடுகளை அச்சுறுத்திவருகிறது.