உயர்மட்டப் பேச்சு வார்த்தையை அடுத்து இந்திய – சீன எல்லையில் படைகள் வாபஸ்

இந்திய – சீனாவிற்கிடையிலான தொடர் பேச்சுவார்த்தை காரணமாக சீன – இந்திய எல்லையான லடாக் பகுதியிலிருந்து இருதரப்பு படைகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.  இருதரப்பு படைகளும் 2.5 கி.மீ. தொலைவிற்கு பின்வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் என்ற பகுதியிலிருந்து சீனப்படை பின்வாங்கியது. அதேவேளை இந்திய இராணுவமும் விலகியுள்ளது.

கடந்த மே மாத ஆரம்பத்தில் சீன இராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக 5, 6ஆம் திகதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 9ஆம் திகதி சீன உலங்குவானூர்திகள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்ற போது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலைமை பற்றி காணொளி காட்சி மூலம் 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 6ஆம் திகதி இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக லடாக் எல்லையிலிருந்து சீன படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணித்து அமைதி வழியில் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியாவும் சீனாவும் சம்மதித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 6ஆம் திகதி நடந்த பேச்சுவார்த்தையையடுத்து,  இந்திய சீன எல்லை நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. லடாக் பகுதியிலிருந்து இரு தரப்பு படைகளும் 2.5கி.மீ தொலைவிற்கு பின்வாங்கியுள்ளது.