உக்ரைன் – ரஷ்யாவின் தானிய உடன்படிக்கை மேலும் நீடிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு மத்தியில் உக்ரைனின் பல மில்லியன் தொன் தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அது எத்தனை காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை. உக்ரைன் 120 நாட்களுக்கு நீடிக்க அழுத்தம் கொடுத்திருக்கும் நிலையில் 60 நாட்களுக்கே அனுமதி நீடிக்கலாம் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

துருக்கியின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற இந்த உடன்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம்பெற்றது. முதலில் செய்யப்பட்ட உடன்பாடு காலாவதியாகும் கடைசி சில மணி நேரத்தில் உடன்பாட்டைப் புதுப்பிக்க உக்ரைனும் ரஷ்யாவும் இணங்கின.

போர் வெடித்ததால் 24 மில்லியன் தொன் உக்ரைனியத் தானியம் வெளியே செல்ல முடியாமல் உக்ரைனியத் துறைமுகங்களில் சிக்கிக்கிடந்தது.

துருக்கியின் முயற்சியால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உடன்பாடு செய்யப்பட்டது.

கருங்கடல் தானியத் திட்டம் ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தானியம் வெளியே வர உதவுகிறது. உலகெங்கும் உணவு விலை ஏற்றம் மேலும் மோசமாகாமல் இந்த உடன்படிக்கை தடுப்பதாக உள்ளது.