ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் – தீபச்செல்வன்

இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே தொலைக் காட் சிகள்தான் மக்களை கட்டிப் போடுகின்றன என்று தமிழக இதழியல் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் கூறுகிறார். ஒரு செய்தியை ஒரு தேவைக்காக உருவாக்கும் இந்த தொலைக் காட்சிகள், இன்னொரு செய்தியை உருவாக்கி, முதல் செய்தியை மறக்கடிக்கச் செய்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் தொண்ணூறுகளின் இறுதிவரை முழுக்க முழுக்க சினிமாதான் ஆட்சி செய்து வந்தது. இப்போது தொலைக்காட்சிகள் மக்களை கட்டி ஆழ்கின்றன.   ஊடகத்துறை சார்ந்த வல்லுநர்கள் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் எச்சரித்த விடயங்கள் இன்றைக்கு தமிழகத்தில் நடந்தேறி வருவதுதான் இங்கே முக்கியமானது.

அமெரிக்கப் பேராசிரியரான வில்பர் ஸ்ராம், 1960களில் தன்னுடைய ஆய்வு ஒன்றில் தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். தொலைக்காட்சிகள் குழந்தைகளையும் இளைஞர்களையும் மிகவும் பாதிப்பதாகவும் அது அவர்களை முழுமையாக சீர்குலைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இவை மனித தொடர்பாடலை பாதிக்கும் என்றும் ஊடகங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்ற கல்வி பள்ளிகளில் சிறு வயதிலிருந்தே தேவை என்றும் வில்பர் ஸ்ராம் போன்றவர்கள் அக்காலத்தில் பரிந்துரைத்தார்கள்.

சினிமா, ஊடகம், ஊடக கல்வி என பல்வேறு கற்கைகளும் உரையாடல்களும் நடக்கக்கூடிய தமிழகத்தில் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. ஆதிக்கம் செய்கின்ற இந்த தொலைக்காட்சிகள்தான் தமிழக மக்களின் எளிய பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. தமிழகத்தின் எத்தனையோ பிரச்சினைகள் வெளித் தெரியாமல் அடிபட்டுப் போகின்றன. இரகசியங்களாக இருளில் மறைந்து போகின்றன. இத்தகைய ஊடக ஆதிக்கத்திற்கு மத்தியில்தான் அங்கு கடுமையான பாலியல் வன்புணர்வுகளும் நடக்கின்றன.

ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நெடுங்காலத் தொடர்புண்டு. ஈழத்தைப் பொறுத்த வரையில், தமிழகத்தின் நிலவரங்களை செய்தியாக வெளியிடுவதில் ஈழப் பத்திரிகைகள் மிக முக்கிய இடத்தை வழங்குகின்றன. தமிழக செய்திகள் என்றும் இந்திய செய்திகள் என்றும் தனியான பக்கங்களே ஒதுக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் ஈழ ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக அமைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒளிபரப்பிய தமிழீழ தேசியத் தொலைக்காட்சி மற்றும் புலிகளின் குரல் வானொலி ஆகியற்றிலும் இந்திய, தமிழக செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இப்போதும் இலங்கையின் தமிழ் தேசிய நாளிதழ்களில் வாரம் தோறும் இந்திய நிலவரங்களின் மதிப்பீடுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

அத்துடன் இலங்கையின் இன்றைய தொலைக்காட்சிகள்கூட அவ்வாறே செயற்படுகின்றன. ஆசியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவை இலங்கை வானொலி. ஊடகத்தில் ஈழம் எப்போதும் முன் உதாரணமான நாடுதான். ஆனால் இன்றைக்கு ஊடகம், சினிமா குறித்த தொழில் நகரமான சென்னையைக் கொண்டுள்ள தமிழகத்தின் ஊடக நிலைமைகள் பெரும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அதாவது மக்கள் ஊடகங்கள் என்பதிலிருந்து அவை விலகுகின்றன.hh  ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் - தீபச்செல்வன்

அண்மைய காலத்தில் பிக்பாஸ் என்ற மெய்மை நிகழ்ச்சி ஒன்று பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஈழம் வரை பரவியிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி முழு தமிழ் நாட்டையும் முழு உலக தமிழர்களையும் ஆக்கிரமித்திருந்தது. இம்முறை குறித்த தொலைக்காட்சி ஈழத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் தெளிவாக இலக்கு வைத்திருக்கிறது. கிளிநொச்சியில் பிறந்து திருகோணமலையில் படித்து, கொழும்பில் வளர்ந்த என்ற அடைமொழிகளுடன் சில போட்டியாளர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கும் திருகோணமலைக்கும் ஒரு அடையாளமும் வரலாறும் இருக்கிறது. இப்போது இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களுக்கு இந்த மண்ணின் போரை வைத்து சமூக வலைத்தளங்களில் கவனங்களை கோரும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. உண்மையில் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரையில் இங்கு எத்தனையோ பிரச்சினைகள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் விடும் கண்ணீர் ஒருபுறம். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குடும்பங்கள் மறுபுறம். நிலங்கள் ஆக்கிரமிப்பு, இராணுவ மயம். அரசியல் தீர்வின்மை என்று ஈழம் கொந்தளிப்போடு போராடிக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள சில அச்சு ஊடகங்கள் ஈழத்தின் இந்த நிலவரங்களைப் பற்றி பேசுகின்றன. சில தொலைக்காட்சிகள் அவ்வப்போது இந்த விடயங்கள் குறித்து சில விவாதங்களை நடத்தியுள்ளன. ஆனால், ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் இந்த தேசத்திற்கான மதிப்பு அவ்வளவுதானா? ஈழத்தில் நடந்தவைகள், இனி உலகத்தில் நடக்கக் கூடாதவைகள்.

எனவே இவற்றை உலக அளவில் எடுத்துச் செல்ல தமிழக ஊடகங்கள் பங்களிக்க வேண்டுமல்லவா? குறிப்பாக தொலைக்காட்சிகள் இந்தப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமல்லவா? ஈழத்தில் லட்சம் பேர் கொல்லப்பட்டபோதும், தமிழக தொலைக்காட்சிகள் மானாட மயிலாட நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தன. அன்றைக்கு இனப்படுகொலை குறித்த செய்தியை தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க தவறியது. இப்போதும், ஈழ மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளை 24 மணி நேர ஒளிபரப்பில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாதா? ஈழம் என்ற ஒரு நாடு இருக்கிறது. அங்கு எப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன? மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? எப்படி போராடுகிறார்கள்? என்ற நிலவரத்தை பேசினால், ஈழம் குறித்த தமிழக மக்களின் புரிதல் அதிகரிக்குமல்லவா?

இந்தப் பெரிய தமிழகம் இருந்த போதுதான் ஈழ இனப்படுகொலை நடத்தப் பட்டது. இன்றைக்கும் தமிழக மக்கள் அந்த குற்ற உணர்வுடன்தான் எங்களுடன் பேசுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடாத்துகின்ற குறித்த தொலைக்காட்சி, பாடல் போட்டி ஒன்றின்போது, விடை கொடு எங்கள் நாடே பாடலை பாட செய்கிறது. ஈழம் குறித்த கழிவிரக்கத்தை தேடி, தொலைக்காட்சி ஊடகப் போட்டியில் வெல்வதும், வர்த்தக ரீதியில் முன்னேறுவதும்தான் அதன் நோக்கம். இது குறித்து ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல, தமிழக தமிழ்மக்களும் சமூக வலைத்தளங்கள் எங்கும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சி ஊடகங்கள் மாய சன்னங்களை உடம்பில் ஏற்றுபவை, ஊசி மருந்து குருதியுடன் கலப்பதைப்போல ஆக்கிரமிப்பவை என தொடர்பியல் கோட்பாட்டாளர்கள் சொன்னது தமிழக ஊடகங்களுக்கு நன்றாகவே பொருந்திப் போகின்றன. இன்றைக்கு அங்கிருக்கும் பிரேக்கிங் நியூஸே தமிழக மக்களை நோயாளிகள் ஆக்கக்கூடியவை. இதுபோன்ற மெய்மை நிகழ்ச்சிகளே மக்களை தனிமைப்படுத்தி சமூகயமாக்கலையும் வாழ்வு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் முடக்குபவை.

ஊடகம் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அவைகளுக்கு எதிரானவையாக மாறிவிட்டன இந்த ஊடகச் சூழல். பிக்பாஸை பற்றிப் பேச வேண்டும் என்பதை ஒரு நிர்ப்பந்தமாக்குகிறது குறித்த நிகழ்ச்சியை நடத்தும் வணிகத் தொலைக்காட்சி. அது ஈழத்தின் கோடிவரை இன்று வருகின்றது. தமிழீழ மக்கள் ஒன்றைத்தான் வேதனையுடன் சொல்ல விரும்புகின்றனர். கமராக்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், நூறு நாட்கள் நடக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதைவிட திரும்பி ஈழத்தைப் பாருங்கள். ஆயிரம் நாட்களாக வெயிலிலும், மழையிலும் பனியிலும் இருந்து போராடுகின்ற எங்கள் அன்னையர்கள்தான் இந்த உலகின் பிக்பாஸ்கள். சுற்றிச் சுற்றி சிங்கள இராணுவக் கமராக்களின் மத்தியில் வாழ்வை போராட்டமாக்கியவர்கள்.