ஈழம் என்பது பிரிவினைவாதமல்ல – மாயைகள் தகர்க்கப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

ஈழம் என்ற சொல் தமிழ்ப் பிரிவினைவாதத்துக்காக பயன்படுத்தப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனை உடைத் தெறியவேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் இல்லை. ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதே போன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு.

ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவினைவாதத்துக்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயமானதல்ல. இதனை தகர்த்து எறியவேண்டும்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுவது போன்று “நான் முதலில் இந்தியன். தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தை வழிபாடு செய்கின்றவன்” என்று கூறுவதில் தவறில்லை. எந்தவொரு தமிழ்ப் புத்திஜீவியிடமும் இது குறித்து கேட்கலாம். ஈழம் என்பது இலங்கைக்கான மறுபெயரே தவிர அது பிரிவினைவாத சொல் அல்ல. ஈழம் என்ற சொல்லுக்கு இலங்கையில் தடையில்லை. அதனை எவ்வாறு சட்டவிரோதமான சொல்லாகக்கருத முடியும்?

தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில், ஈழம் என்ற சொல் உள்ளது. ஈழ சிரோமணி என்ற சொல் தேசிய கீதத்தில் காணப்படுகின்றது. இலங்கை, ரத்தினதீபம் என்பது போன்றே இலங்கைக்கு ஈழம் என பெயருள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்திற்காக போராடவில்லை. அவர் தமிழீழத்திற்காக போராடினார். ஈழம் என்ற சொல் அடிப்படைவாதமாக கருதப்படவே முடியாது. அவ்வாறு கருதினால் அது பாரதூரமான தவறாகும். நாட்டை பிளவடையச் செய்வதற்கு தாம் ஆதரவளிக்கும் நபர் கிடையாது என்ற போதிலும் ஈழம் என்ற சொல்லைப் பிரிவினையாக கருதுவது இன்னும் மக்களை பிளவுபடுத்தவே செய்வதாகும்.

சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்க்கின்றார்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள் என்ற மாயை காணப்படுகின்றது. இவ்வாறான மாயைகள் தகர்க்கப்பட வேண்டும்” என்றார்.