Home செய்திகள் ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) – பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர் ...

ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) – பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில், ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கண்காட்சியில் இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் பல்வேறு அம்சங்களை விளக்கும் ஓவியங்கள், மாதிரி பொருட்கள், ஆவணப்படங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.7f2a4109 200b 47ad a470 aa3ecc13acc5 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ‘தமிழ் தகவல் நடுவம்’ஏற்பாடு செய்திருந்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருப்பதாகக் கூறினர்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் தாம் விளக்கியிருப்பதாகவும் அவர்களை தெரிவித்தனர்.

அத்துடன் தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக அந்த அமைப்பை சேர்ந்த மற்றொருவர் கூறினார்.

மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின.

போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது என்று தெரிவித்தார் வேறொரு உறுப்பினர் .

இந்த கண்காட்சியில், உள்நாட்டுப் போர் குறித்த முக்கிய ஆவணங்கள், அறிக்கைகள், நூல்கள், விடுதலைப் புலிகளின் திருமணங்களில் கட்டப்பட்ட புலிப்பல் தாங்கிய தாலி ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், 1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வந்த இலங்கை தமிழர்களுடனான தனது நினைவுகளை பகிர்ந்ததுடன், அழிவுக்குள்ளான தமிழர்களின் அடையாளத்தை இந்த கண்காட்சியின் மூலம் உயிர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அடுத்த சந்ததியினர் தங்களது பெற்றோர் கடந்து வந்த கொடுமைகளை முறையாக, முழுமையாக அறியும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

லண்டனில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை, பிரிட்டனின் தேசிய அருங்காட்சியகத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் நிரந்தர கண்காட்சியாக வைப்பதே தங்களது இலக்கு என்று கூறும் தமிழ் தகவல் நடுவத்தினர், அடுத்ததாக கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இதே கண்காட்சியை நடத்துவதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version