ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டுமென நினைத்த எம்.ஜி. ராமச்சந்திரனின் 32ஆவது நினைவு தினம்

இந்தியா, தமிழக முன்னாள் முதலமைச்சரும், நடிகரும், புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டவருமான எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இலங்கையில் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி பிறந்த இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்பதாகும்.

தமிழ்நாட்டு முதலமைச்சராக 3முறை பதவி வகித்தார். பத்மஸ்ரீ விருதிற்காக பரிந்துரை செய்த போதும், அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.

அவர் ஆட்சியிலிருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார். தேசியத் தலைவர் அவர்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்குத் தேவையான நிதியுதவியையும் வழங்கியிருந்தார். இதனால் ஈழத் தமிழர்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் வெல்ல வேண்டுமெனக் கூறி அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்காக ரூபா 7கோடி இந்திய ரூபாய்களை தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கியிருந்தார். இதுதவிர இயற்கை எய்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பும் 40 இலட்ச ரூபாவை தேசியத் தலைவர் அவர்களுக்கு வழங்கியிருந்தார். இந்த வேளை, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தது.

சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சந்தித்து பேசியிருந்தார்.

சுகயீனம் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்திருந்த போது, சிகிச்சை பலனளிக்காது 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இயற்கையெய்தினார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தாயகம் இருந்த போது, இவரின் நினைவு தினத்தை ஈழத் தமிழர்கள் நினைவு கூர்வது வழமையானதொன்று.