ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டது – தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்

ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்காதது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை.கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (23) வெளியிட்ட அறிக்கையில்,

“இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது இலங்கை அரசு.

இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் இருந்து தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தன.

இந்திய அரசு, சிறீலங்காவை ஆதரிக்கும் என்று சிறீலங்கா வெளிவிவகாரத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார்.

அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்தார்கள். இல்லையேல், சிறீலங்காவிற்கு ஆதரவாகவேவாக்களித்திருப்பார்கள். இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”. என்று வை.கோ வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் வெற்றி அடைந்ததன் மூலம் உலக நாடுகளில் இருந்து சிறீலங்கா தனிமைப்படுத்தப்பட்டது என தியாகு தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா விலகியது நியாயமற்ற செயல் என விடுதலை ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்காதமைக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.