Home செய்திகள் ஈழத் தமிழர்களின் மிகத் தொன்மையான குலதெய்வ வழிபாட்டுச் சான்றுகள் கண்டுபிடிப்பு

ஈழத் தமிழர்களின் மிகத் தொன்மையான குலதெய்வ வழிபாட்டுச் சான்றுகள் கண்டுபிடிப்பு

நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்த மிகத் தொன்மையான சான்றுகள் இலங்கையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாகபடுவானில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம்  கண்டுபிடித்துள்ளார். 

பழங்கால ஈழத் தமிழர்களின் நாக வழிபாடு: புதிய தொல்லியல் ஆதாரங்கள்

இந்த கண்டுபிடிப்பு குறித்து பேராசிரியர் புஷ்பரட்ணம்  தெரிவித்துள்ள தகவலில்,

“தென்னாசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது. நாகம் பூமிக்குள் இருந்து வந்து மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதால் ஆதி கால மக்கள் அவற்றை மண் (பாம்பு) புற்றுக்குள் வைத்து வழிபட்டனர். இதற்கு மத வழிபாட்டில் நாகத்தை குல மரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்து வருவதே காரணமாகும். இதன் காரணமாகவே வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர்.

தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகராக இருந்ததெனக் கூறப்படுகின்றது. இலங்கையின் பூர்வீக மக்களது வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் வட இந்தியாவில் இருந்து விஜயன் தலைமையிலான மக்கள் இலங்கை வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் குறிப்படுகின்றன. ஆயினும்   இலங்கையின் மனித வரலாறும், நாகரீக வரலாறும் விஜயன் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்டது எனக் கூறும் அறிஞர்கள் பலரும் பாளி இலக்கியங்கள் கூறும் இயக்கர், நாகரை மனிதப் பிறவிகள் அற்ற அமானுசராகவே எடுத்துக் கொள்ளுகின்றனர்.

ஆனால்  பேராசிரியர் சத்தமங்கல கருணாரத்தின போன்ற அறிஞர்கள் விஜயன் வருவதற்கு முன்னர் வாழ்ந்த நாகரை இலங்கையின் தொன்மையான இனக்குழுக்களில் ஒன்று என்பதற்கு இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புழக்கத்தில் இருந்த கல்வெட்டுக்களில் வரும் நாககுலம் பற்றிய செய்திகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இலங்கையில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் விஜயன் தலைமையிலான வட இந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னரே இலங்கையில் வளமான நாகரீக வரலாறு கி.மு.1000 ஆண்டிலிருந்து தோன்றி வளர்ந்தமை பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் (கருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள்) உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் தொல்லியற் திணைக்களப் பணிப்பாளராக இருந்த  கலாநிதி சிறான்தெரணியகல இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றார். இப்பண்பாட்டு மக்கள் தென்தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறும் பேராசிரியர் கா.இந்திரபாலா, இந்த நாக இன மக்களின் ஒரு பிரிவினரே இற்றைக்கு 2500 ஆண்டளவில் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினர் எனக் கூறுகின்றார்.

தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு பாம்பு புற்று வழிபாடு இருந்ததற்கான சான்றாதாரங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆனால் இக்காலத்திற்கு முன் இருந்த  ஆதியிரும்புக் காலப்பண்பாட்டில் இவ்வழிபாடு இருந்தற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் வடஇலங்கையில் அண்மையில் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது ஆதியிரும்புக்கால மக்களிடையே இவ்வழிபாடு இருந்தற்கான அதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் இருந்து இலங்கைக்கு ஆதியிரும்புக் காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வமாக கொண்டிருந்த மக்கள் எனபது உறுதியாகின்றது. அவற்றுள் நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நாகத்தைப் பானையில் வைத்து வழிபடப்பட்ட மரபு வடஇலங்கை மக்களிடையே நாக வழிபாடு தொன்மையானது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாக வழிபாடு பற்றிய  சான்றுகள் சில தென்னாசியாவின் ஏனைய வட்டாரங்களில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இவ்விடத்தில்  நாகபடுவான் என்ற இடப்பெயரின் பழமை, அதன் பொருள் ஆய்வுக்கு உரியது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாககுளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில் அழைக்கப்படுகிறது எனலாம்.

கலாநிதி இரகுபதி இவ்விடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக்க கொண்ட மக்கள்  வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார். இவ்விடத்தில்  ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் அதிக எண்ணிக்கையில் சுடுமண்ணாலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாக, நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் ஆதியிரும்புக்காலப் பண்டு மக்கள் மதவழிபாட்டில் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபடப்பட்டதற்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்குப் புதிய அம்சமாகக் காணப்படுகின்றது.

இங்கு அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் குழிகளில் ஒன்றில் அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பெரிய பானை மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப்பகுதியும், அதைச் சுற்றி மூடிய நிலையில் பாம்பு புற்றை அடையாளப்படுத்தும்  நான்கு சிறு கலசங்களும் காணப்படுகின்றன.

பானைக்குள் இருந்த மண்ணை அகற்றிப் பார்த்த போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த அழகான நாக பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்ததை தெரியவந்தது. இப்பானையின் மூன்று திசைகளிலும்  தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அமர்ந்துள்ள தெய்வத்தின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது.

நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கயவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது. இவ்வாதாரங்கள் பாம்பு புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன்  தோன்றிய  தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் ஒன்றுக்கு மேற்பட்ட நாக வடிவங்கள் மண் சட்டிகளில் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாதாரங்கள் சமகாலத்தில் நாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோசம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாகபாம்பை வைத்து ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு ஆதியிரும்புக் காலத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது.

பண்டுதொட்டு திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியம்  நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இப்பெயர்களே  கி.பி.13 ஆம் நூற்றாண்டுவரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15 ஆம் நூற்றாண்டில் யாழ்பாணயன் பட்டினம் என்ற பெயரும் தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்து வந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும் அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வந்ததற்கு  தற்காலத்தில் வடஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப்  பண்பாட்டை அறிமுகப்படுத்திய  நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம்.” என்று கூறியுள்ளார்.

நன்றி- பிபிசி

Exit mobile version