Tamil News
Home செய்திகள் ஈழத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் என்ற இனமே இருக்காது – பழ. நெடுமாறன்

ஈழத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் என்ற இனமே இருக்காது – பழ. நெடுமாறன்

ஈழத்தில் மிகுதியாக இருக்கக்கூடிய மக்களாவது பாதுகாக்கப்படா விட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு தமிழனே இருக்க மாட்டான் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை பொது அரங்கத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

அந்த மக்கள் அழிவின் விளிம்பில் இருந்து கதறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழரைக்கோடி மக்களுக்கும் உண்டு. அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு அவர்களைக் காக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு நின்றால் உலககை ஈடுத்தமிழர்களின் பக்கம் திருப்ப நம்மால் முடியும்.

இலங்கை சுதந்திரமடைந்த 1948இலிருந்து தொடர்ந்து திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகின்றது. படுகொலை மட்டுமல்லாது, பண்பாட்டு, அடையாளங்களும் அழிக்கப்படுகின்றன. இதை சிங்களப் பேரினவாதிகள்  மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்படும் போது, உலகமே வேடிக்கை பார்த்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையகம் அறிக்கை வெளியிட்டது  ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஐ.நா அறிக்கை மட்டும் வெளியிட்டது. உலகம் எம்மை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இந்தியாவில் பல போராட்டங்கள் நடைபெற்ற போதும் எதுவும் நடக்கவில்லை. உலகம் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

ஈழத்தில் மிகுதியாக இருக்கும் மக்களாவது இனிமேல் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்காக நாம் குரல் கொடுப்போம். என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வை கோ, எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மார்க்சிஸ்ட் கம்êனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ.நீலமேகம், இந்திய கம்êனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் இரா.திருஞானம், மாவட்டச் செயலர் மு.அ.பாரதி, விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிராசன், வழக்குரைஞர் அ.நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version