ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினை அனைத்துலக நீதியே பிரச்சினைக்கான தீர்வாகும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் ஈழத்தமிழர் அனைத்துலகப் பிரச்சினைக்கு அனைத்துலக நீதி வழங்கு முறைமை எந்த அளவுக்குச் செயற்படுத்தப்படப் போகிறது என்பது உலகெங்கும் உள்ள மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான மக்களதும், அமைப்புக்களதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது சிறீலங்காவில் அரசாங்கம் அனைத்துலக சட்டங்களுக்கு, – மனித உரிமைகள் மரபுசாசனம் உட்பட – தனது ஆட்சிப்பரப்பு எல்லைக்குள் தான் கட்டுப்படப் போவதில்லை என்கிற உறுதியான முடிவில் இறுக்கமாக உள்ளது. அப்படியானால், உலகில் எந்த ஒரு நாடும் தனது இறைமை என்ற மீயுயர் உரிமையைப் பயன்படுத்தி பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு ஊடான சர்வாதிகார ஆட்சி முறைமையை இந்த 21ஆம் நூற்றாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான போக்கை உலக மக்களின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பொறுப்பு வகிக்கும் அனைத்துலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கப்போகிறதா? இது அனைத்துலக சட்டங்கள், ஒழுங்குகள் தொடர்பாக சிறீலங்கா தோற்றுவித்துள்ள மிக முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலிலேயே 21ஆம் நூற்றாண்டின் உலக அமைதியும், பாதுகாப்பும் உறுதி பெறும் என்பது வெளிப்படையான உண்மை.

அதேவேளை ஈழத்தமிழர் பிரச்சினை, அது தோன்றிய விதத்திலும் தீர்வை நாடும் விடயத்திலும் உலகப் பிரச்சினையாகவே அன்றும் இன்றும் உள்ளது.

  • பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் தவறான முடிவுகளால் 1833 முதல் 1948 வரை உலகின் காலனித்துவ ஆட்சிப் பிரச்சினையாகவும்,
  • 04.02.1948 முதல் 22.05. 1972 வரை சிங்கள பௌத்த பெரும்பான்மைப் பாராளுமன்ற ஒற்றையாட்சி என்னும் உலகின் நவகாலனித்துவப் பிரச்சினையாகவும்,
  • 22.05. 1972 முதல் 18.05. 2009 வரை நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நடைமுறை அரசு ஒன்றுக்கான உலக நாடுகளின் அங்கீகாரப் பிரச்சினையாகவும்,
  • இந்த 37 ஆண்டுகால தமிழீழ அரசு நோக்கிய அரசின் நடைமுறைச் செயற்பாட்டைச் சிறிலங்கா இனஅழிப்பு மூலம் இல்லாதொழித்ததின் விளைவாக 18.05.2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனஅழிப்பு முதல் இன்று வரை இந்த இனஅழிப்புக்கான அனைத்துலக நீதியையும், தங்களின் மனிதஉரிமைகள் மற்றும் மக்கள் உரிமைகளைப் பேணுவதற்கு அனைத்துலக சட்டங்கள், ஒழுங்குகள், வழமைகள் மூலமான வழிகாட்டலைக் கோரும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்னும் அனைத்லுகப் பிரச்சனையாகவும்

ஈழத்தமிழர் பிரச்சினை என்றும் அனைத்துலக நீதிக்கான பிரச்சினையாகவே தொடர்கிறது.  ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது எந்த ஒரு வரலாற்று நிலையிலும் சிங்கள ஆட்சிக்குள் உட்பட்ட மக்களின் பிரச்சினையாக உலகின் முன்வைக்கப்படவில்லை என்பதே இங்கு முக்கியமானது. இதனால் ஈழத்தமிழர் பிரச்சினை சிறீலங்காவின் உள்விவகாரப் பிரச்சினையோ அல்லது அதன் இறைமைக்கு உட்பட்ட பிரச்சினையோ அல்ல. உலகால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை என்பது தெளிவான விடயமாக உள்ளது.

எனவே மனித உரிமைகள் மீறல்கள், யுத்தக் குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் என்கிற வகையில் ஈழத்தமிழர்களுக்கு சிறீலங்கா செய்த, செய்கிற இனஅழிப்புக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் மட்டுப்படுத்தக் கூடாது என்பதே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஈழத்தமிழர்களின் P2P குறியீட்டால் சுட்டப்பட்ட மக்களின் சனநாயகப் போராட்டம் அமைந்தது.

இனஅழிப்பு ஒன்றுக்கான நீதி, இனஅழிப்புக்கு உள்ளான மக்களுக்கான தீர்வு என்கிற இரு அடிப்படைகளில் உலகநாடுகளும், உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுக வழிகாட்ட வேண்டும். இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் ஈழத்தமிழர் பிரச்சினையை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு கொண்டு செல்ல வேண்டும். அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதனைச் செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் தாங்கள் வாழும் நாடுகளை உரிமையுடன் வலியுறுத்த வேண்டும். இது கெஞ்சிப் பெறும் விடயமல்ல. விட்டுக்கொடுப்புக்களுக்கான பேரம் பேசும் அரசியல் பேச்சுவார்த்தைகளும் அல்ல. யாராலும் எக்காலத்திலும் பிரிக்கமுடியாத ஈழத்தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் தன்னாட்சி உரிமைகள்.

இந்தத் தன்மையுடன் ஈழத்தமிழ் மக்களின் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசும், இந்திய மத்திய அரசை ஈழத்தமிழர்கள் பிரச்சினையை சிறீலங்காவின் உள்நாட்டு விடயமாக அல்லாது உலகின் மனித உரிமைத் தீர்வுக்கான அனைத்துலகப் பிரச்சினையாக அணுகும்படி வற்புறுத்த வேண்டும்.

இவற்றைச் செய்வதற்கான அரச ஆதரவுகளைத் திரட்ட திரள்நிலை ஊடகப் பலத்தை வளர்க்க வேண்டிய, சமுக ஊடகங்களை ஊக்கப்படுத்த வேண்டிய  முக்கிய வாரமாக ஈழத்தமிழர்களுக்கும் உலகத்தமிழர்களுக்கும்  இவ்வாரம் அமைகிறது.