ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையை ஏற்று உலகின் பாதுகாப்பையும், அமைதியையும் பேணுக!

சிறீலங்கா, இலங்கைத் தீவில், இலங்கை மக்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாத நிலப்பரப்பாக, ஆனால் சீனாவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் நிலப்பரப்பாக ஒரு நிலப்பரப்பை இந்துமா கடலின் மேல் கொழும்புத் துறைமுக நகரச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இவ்வாரத்தில் உருவாக்கியுள்ளது.

அரசியல் மொழியில் கூறுவதானால், இலங்கைத் தீவில் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற அதன் வரலாற்று இறைமையாளர்களைக் கடந்து, சீன இறைமையாளர்களை இன்றைய சிறீலங்கா அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. பில்லியன் கணக்கில் பணத்தை ராஜபக்ச குடும்ப ஆட்சியினர் பெறுவதற்காக இலங்கைத் தீவின் இறைமையில் இந்த மாற்றம்.

சீனா இந்நகருக்குள் செய்யும் பல செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை சிறீலங்காவுக்கு இல்லை. இது தேச அரசுகள் குறித்த இன்றைய அனைத்துலக சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையினது அதன் உறுப்புரிமையுள்ள தேச அரசுகள் குறித்த சட்டங்களையும் மீறுகின்ற செயற்பாடாகி உலக அமைதிக்கும், இந்துமா கடலின் அமைதிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய சிறீலங்காவின் செயலாக மாறியுள்ளது. அதே நேரத்தில் இந்திய சீன ஆசிய வல்லாண்மை நிலையில் இந்தியாவைப் பின்தள்ளி சீனாவை முன்னிறுத்தும் செயற்பாடாகவும் அமைகிறது. அமெரிக்க – யப்பான் – அவுஸ்திரேலிய – இந்திய நாற்கோண இந்துமா கடல் கட்டமைப்புக்கான சவாலாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா தோற்றுவித்துள்ள இந்த அனைத்துலக பிராந்திய அரசியல் நெருக்கடிக்கு ஈழத் தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை உலகமும், இந்தியாவும் உடனடியாக ஏற்று ஈழத்தமிழர்கள் மூலம் இந்துமா கடலின் அமைதியை உறுதிப்படுத்துவதால் மட்டுமே அமைதியான முறையில் தீர்வு காண முடியும்.

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தமிழர்களுக்கு இந்துமா கடல் மேலிருந்த இறைமையின் பின்னணியிலேயே 1796 முதல் 1802 வரை மதராசில் இருந்து ஈழத்தையும் உள்ளடக்கிய அரசியல் அலகாகப் பொதுவான நிதியுடன் ஆண்டனர். இவற்றை எதற்காக இன்று நினைவு கூர்கின்ற தேவையேற்படுகிறது என்றால், ஈழத்தமிழர்களுக்கு வரலாற்றுக்கு முன்பான காலம் முதலாக இந்துமா கடல் மேல் இறைமை உண்டு என்பதைத் தெளிவாக்கவே. இந்த ஈழத்தமிழர் இறைமையைச் சிறீலங்கா சீனாவிடம் கையளிப்பதற்கு உலக நாடுகளும், அமைப்புக்களும் அனுமதிக்கக் கூடாது.

ஈழத்தமிழர்களின் இறைமையை சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்குப் புறம்பாக கையகப்படுத்தியுள்ள நிலைமையை மாற்றி, ஈழத்தமிழர்களின் இறைமையை அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் காலதாமதமின்றி உலக நாடுகளும் அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டாலே, தங்களுடைய இன அழிப்புக்கு பாதுகாப்புத் தேடி சீனாவின் இறைமையையே இலங்கைத் தீவுக்குள் நிலைப்படுத்திச், சீனாவின் ஆதரவில் ஒளிந்து வாழ முற்படும் இன்றைய ஆட்சியாளர்களின் தன்னல நோக்கினை முறியடிக்க முடியும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையை சிறீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது, இரு தேசங்களை ஒரு நாடாக பிரித்தானியக் காலனித்துவம் இணைத்ததின் வழியான காலனித்துவப் பிரச்சினையாக நோக்க வேண்டும். தங்களுடைய அரசியல் உரிமைகளைப் பிரித்தானியாவிடம் இருந்து தாங்கள் பெறவேண்டும் என்பதற்காகவே ஈழத்தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து விடுதலைபெறப் போராடினார்கள். அந்த உரிமைகளை பிரித்தானியா சோல்பரி அரசியலமைப்பின் 29 (2) பிரிவால் சிறுபான்மை இனங்கள், மதங்களுக்கு எதிரான சட்டங்கள் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டால் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலிடம் மேன்முறையிடலாம் என ஈழத் தமிழர்களின் இறைமை இலங்கைப் பாராளுமன்றத்திடமும் பிரித்தானிய அரசிடமும் பகிரப்பட்ட நிலை உண்டென உறுதியளித்து, உருவாக்கிய ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையால் 1948 முதல் 1975 வரை பெற முடியவில்லை என்பதாலேயே, ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிப்பர் என்கிற தன்னாட்சிப் பிரகடனத்தை அன்றைய ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தலைவர் சா.ஜே.வே. செல்வநாயகம் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் விடுத்து, பாராளுமன்ற ஆட்சி முறையில் இருந்து விலகினார்.

ஈழத்தமிழர்களின் இறைமை பிரித்தானிய அரசிடமும்  இருந்ததால் 22.05.1972 இல் அன்றைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்திப் பாராளுமன்றத்திற்கு வெளியே ஈழத்தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிகளுக்கு, அனுமதி மறுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையால் சிங்கள பௌத்த சிறீலங்கா குடியரசை நிறுவிய பொழுது, ஈழத்தமிழரின் இறைமை பிரித்தானியாவிடம் இருந்து நேரடியாக ஈழத்தமிழரிடம் மீண்டது.

இதனால் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தங்களின் இறைமையின் அடிப்படையில் நிறுவிய அரசு நோக்கிய அரசே தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் அரசுக்குரிய எல்லா அம்சங்களுடனும் முப்பதாண்டுகளுக்கு மேலாக 18.05.2009 வரை நடைபெற்றது. இதுவே சிறீலங்காவின் முள்ளிவாய்க்கால் உலகப் படுகொலையால் துப்பாக்கிகள் மௌனிக்கின்ற, சனநாயக வழிகளில் போராடி நிலைநிறுத்தப்பட வேண்டிய இன்றைய ஈழத்தமிழ் மக்களின் அரசாக உள்ளது. ஈழத்தமிழர்களின் இந்த இறைமை தொடர்பான வரலாற்று உண்மைகளையும், வளர்ச்சிகளையும் புலம்பதிந்த தமிழர்களும் ஈழத்தமிழர்களின் தாயக அரசியல்வாதிகளும் அழுத்தம் திருத்தமாக உலகுக்கு எடுத்துரைக்க வேண்டிய நேரமிது.

அப்பொழுதுதான் ஈழத்தமிழர்களின் இறைமையை,

 இப்பிரச்சினை காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினை என்ற அனைத்துலக வகைமையுள்ளும்,

 இன்று சீனாவிடம் சிறீலங்கா செய்யும் இறைமைப் பகிர்வானது, இன்றைய ஈழத்தமிழர்களை அரசற்ற எல்லைகளில் வாழும் தேச இனமாகவும் மாற்றுவதால், அந்த வகைமையுள்ளும்,

உலகால் பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்த முடியும். இச்சூழலில் ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக மாறும். அதன் வழி ஈழத் தமிழரின் இறைமை உலகால் ஏற்கப்படும் பொழுதே, ஈழத்தமிழர்களின் துணையுடன் இந்துமா கடலின் அமைதியையும், உலகின் பாதுகாப்பையும் உறுதி செய்து, போரற்ற முறையில் இன்றைய இந்துமா கடல் சமமின்மையை சரிசெய்ய முடியும். இன்றைய காலத்தில் இந்துமா கடல் சமநிலையைப் பேண ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியை ஏற்று, அவர்களின் இறைமையை அங்கீகரிப்பதே சிறந்த பொறிமுறையாகும் என்பதை உலக நாடுகளுக்கு இவ்வாறு உலகத் தமிழர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.