Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் உரிமை மையம் காலத்தின் தேவையாகிறது

ஈழத்தமிழர் உரிமை மையம் காலத்தின் தேவையாகிறது

2019ம் ஆண்டு உலக மனித உரிமைகள் தின நடப்பு ஆண்டுக்கான மையப்பொருளாக “மனித உரிமைக்காக இளையோரே எழுந்து நில்லுங்கள்” என்னும் அழைப்பை ஐ.நா. விடுத்துள்ளது. இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளிக்குமாறு ஐ.நா.வின் செயலாளர்; அன்ரோனியோ குற்றூஸ் (Antonio Guterres) வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

மனித உரிமையை முன்னெடுப்பதற்கு வயதெல்லை என்பது இல்லை. இந்த மனித உரிமைகள் குறித்த உணர்வுகள் சிறுவர்களுக்கு மத்தியிலும் அதாவது 18 வயதுக்கு உட்பட்டோர் மத்தியிலும் அறிவூட்டலாலும், செயற்திட்டங்களாலும் வளர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்சிலெட் (Michelle Bachelet) அவர்களும் “எங்களுடைய குரல்களை உயர்த்துவது அமைதியினதும் நீதியினதும் எதிர்காலத்திற்கும், வளங்குன்றா பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியம்” என வலியுறுத்தி உள்ளார். இவையெல்லாம் கடந்த நூற்றாண்டில் சனநாயகம் உலக அரசியலின் செல்நெறியாக அமைந்தது போல இந்த 21ம் நூற்றாண்டின் செல்நெறியாக மனிதஉரிமைகள் அமையப் போகிறது என்பதை தெளிவுபடுத்தி வருகின்றன.

இன்று மனிதஉரிமைகள் சிறுவர்கள் மத்தியில் அறிவாக்கப்பட வேண்டும். இளையவர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்க வேண்டும் என்னும் ஐ.நா.வின் கருத்து வரவேற்புக்குரியதே ஆனால் இதே அனைத்துலக நாடுகள் ஒன்றிய மன்றத்தினரே இலங்கையில் ஈழத்தமிழ் இளையோர்கள் மனித உரிமைக்ககாக எழுந்து நின்ற நேரமெல்லாம் அதனைக் கவனத்தில் கொண்டுசெயற்படாமல் விட்டமையே த்தமிழினம் 1972 முதல் 2009 வரை 37 ஆண்டுகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் மனித உரிமை மீறல்களையும் இன அழிப்புக்களையுமே வாழ்வாகக் கண்டு, இன்றைய உலகின் மிக மோசமான இனஅழிப்பை 2009இல் முள்ளிவாய்க்காலில் சந்திக்க மறைமுகக் காரணமாயிற்று.

எது எப்படியிருப்பினும் இன்று ஈழத்தமிழர்கள் தங்களின் மனித உரிமைக்கான குரலை, துன்புறும் ஈழ மக்களின் குரலாக வெளிப்படுத்துவதற்கான பலம் பொருந்திய ஒன்றிணைந்த ஈழத்தமிழர் உரிமை மையம் ஒன்று உடன் வேண்டும் என்பதே இலக்கின் அரசியல் எதிர்வு கூறலாக இருந்தது. அது இன்று ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைத் தேவையாகவும் மாறிவிட்டதை 2019 இலங்கை அரச அதிபர் தேர்தல் உறுதி செய்தது.

இன்று ஐ.நா. வின் இந்த ஆண்டுக்கான மனித உரிமை தின அழைப்பும் அதனை உறுதி செய்துள்ளது.
இதனை உணர்ந்து தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் இளையோரை ஈழத்தமிழ் மக்களின் மனித உரிமைக்காக எழுந்து நிற்க ஊக்கமளித்தல் வேண்டும். ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளை வென்றெடுப்பது இன்று ஒவ்வொரு ஈழத்தமிழரின் கையிலும் உள்ளது.

இவ்வாரத்தில் சுவிஸ் உயர் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றஇயக்கமல்ல மக்கள் விடுதலைப்போராட்ட அமைப்பு என்று அளித்துள்ள தீர்ப்பும் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்ரர் நீதிமன்றம் இலண்டனின் இலங்கைத் தூதுவராலயத்தில் கடமையாற்றிய சிறிலங்கா இராணுவ அதிகாரி தூதரகத்தின் முன்னால் சனநாயக முறைகளில் வன்முறையற்ற போராட்டம் நடத்திய ஈழத்தமிழ் மக்களின் கழுத்தைக் கத்தியால் அரிவேன் எனச் சைகையால் அச்சப்படுத்திய வழக்கில் 2400 பவுண்ஸ் அபராதம் விதித்ததும் மனிதஉரிமைக்காக எழுந்து நிற்கும் உற்சாகத்தை ஈழத்தமிழ் இளையோருக்கு அளித்துள்ளது. இந்த மனிதஉரிமை வெற்றிகளுக்காக உழைத்த அனைவர்க்கும் இலக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகிறது.

இலக்கு மின்னிதழ் – ஆசிரிய தலையங்கம்

Exit mobile version