Tamil News
Home செய்திகள் ஈழத்தமிழர் இனப்படுகொலை: ஐ.நா. சார்பில் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்

ஈழத்தமிழர் இனப்படுகொலை: ஐ.நா. சார்பில் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வை.கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை இன்று விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர் மற்றும் இனப்படுகொலை குறித்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்ததைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2015 செப்டெம்பரில் ஐ.நா. பொதுப் பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளியானது. அதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் 30/1 நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசு கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை வலியுறுத்தியது. ஆனால் இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அரசு, ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தின்படி, போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ, பொறுப்பு ஏற்கவோ ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மேலும் 2 ஆண்டுகள் காலக்கெடு நீடிப்பு தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது ஆண்டுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டது.

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், இலங்கை அரசு சார்பில் பங்குபற்றிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, ஐ.நா. பேரவை நிறைவேற்றிய தீர்மானங்கள் 30/1, 40/1 ஆகியவற்றில் இருந்து இலங்கை அரசு விலகுவதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் மீது, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்போம் என்றும் கூறி இருக்கின்றார்.

மேலும், நல்லிணக்க முயற்சிகளில் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக் காப்பு விடயங்களில் இருந்தும் இலங்கை அரசு பின்வாங்குவது ஆபத்தான நடவடிக்கை இலங்கை அரசு சிறுபான்மை சமூகங்களின் தேவைகளுக்காக செயற்பட வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கைகூட இலங்கை பாதுகாப்புப் படைப்பிரிவினரால் கண்காணிக்கப்படுவதும், மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், வெறுக்கத்தக்க பேச்சுக்கள், சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடருவதையும், ராஜபக்ஸ சகோதரர்கள் ஆட்சியின் கொடூரங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த ஐ.நா. மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version