Home ஆய்வுகள் ஈழத்தமிழர்கள் நாடற்ற தேசஇன வாழ்வில் 48 ஆண்டுகள்;புலம்பெயர் ஈழத்தமிழர்கள்  இந்நிலையை மாற்றுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன் 

ஈழத்தமிழர்கள் நாடற்ற தேசஇன வாழ்வில் 48 ஆண்டுகள்;புலம்பெயர் ஈழத்தமிழர்கள்  இந்நிலையை மாற்றுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன் 

22.05.1972 உலக வரலாற்றில் அதன் மூத்த குடிகளில் ஒருவரான ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்ட வரலாற்றைப் பதிவாக்கியது.

ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட வாழ்வியலைக் கொண்ட உலகின் மக்கள் இனம். இன்று தங்கள் இறைமையும் தன்னாட்சியுமுடைய இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுத் தாயக உரிமை கொண்ட தமிழ்த்தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றனர்.

போர்த்துக்கேயர் காலனித்துவ ஆட்சியை இலங்கையின் சிங்களக் ‘கோட்டை’ அரசில் 1505இல் நிறுவியதன் பின்னர் 116 ஆண்டுகள் தங்களால் வெல்லப்பட முடியாத நிலையில் எதிர்த்து வந்த தமிழர்களின் இறைமையுள்ள யாழ்ப்பாண அரசை 1621இல் கடைசி யாழ்ப்பாண மன்னரான 2ம்சங்கிலி மன்னரைக் கைப்பற்றியதன் மூலம் தமதாக்கிக் கொண்டது.

ஆயினும் போர்த்துக்கேயர் இந்துமாக்கடலின் உலக வணிகமொழியாக இருந்த தமிழ்மொழிக்கு தமிழ் – போர்த்துக்கேய அகராதிகளை உருவாக்கியும்,தமிழ் இலக்கணத்தைப் பிறமொழியினர் படிக்கத் தக்க வகையில் நூல்களை எழுதியும்,ஈழத்தமிழ் மக்களின் தமிழ்த் தேசியத்தை உலகறிய வைத்தனர்.

அவ்வாறே தமிழர் தாயகங்களை அங்கிருந்த உள்ளூர் ஆட்சி முறைமைகளின் வழியாகவே தாங்களும் ஆட்சி செய்து, தமிழர்களிடம் தங்கள் வர்த்தகத்திற்குத் தேவையான சந்தைப்பொருள்களையும் வரிப்பணத்தையும் பெற்றதுடன், தங்களின் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தை மக்களிடை பரப்புவதில் ஆர்வம் காட்டினரேயன்றி,ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதிக்கக் கூடிய ஆட்சிமுறைமைகளை உருவாக்கவில்லை.

தமிழர்களின் சிற்றரசாக இருந்த வன்னி அரசை இவர்களால் வெல்ல முடியவில்லை.
பின்னர் போர்த்துக்கேயர் இலங்கையில் தங்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளின் இறைமையை டச்சுக்காரரிடம் கையளித்த போது அவர்கள் தமிழர்களின் இறைமையின் தனித்துவத்தை ஏற்று, தமிழர்களுடைய தேசவழமைகளையும் சட்டமாக்கித் ‘தேசவழமைச்சட்டம்’ என்னும் பெயருடன் தங்கள் உரோமச்சட்டத்துடன் இணைத்து, புத்தளம் வரை ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்த தமிழர்களின் தாயகத்தை உள்ளூர் ஆட்சி முறைமைகளுக்கு ஊடாக ஆண்டனர். இதனால் தமிழர்களின் இறைமை பாதிப்படையாமலே தொடர்ந்தது.three sovereign regions in the island of ceylon colombotelegraph ஈழத்தமிழர்கள் நாடற்ற தேசஇன வாழ்வில் 48 ஆண்டுகள்;புலம்பெயர் ஈழத்தமிழர்கள்  இந்நிலையை மாற்றுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன் 

1796இல் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழர் தாயகங்களான தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே தேசமாகக் கருதி 1802வரை சென்னையில் இருந்து ஒரே நிதிப்புழக்கத்துடன் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படுத்தித் தமிழர்களின் தாயகத் தேசிய தன்னாட்சி உரிமைகளை வெளிப்படுத்தினர்.

1802 இல் இலங்கை முடிக்குரிய நாடாக பிரித்தானிய அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது ஈழத்தமிழர்களின் இறைமை பிரித்தானியப் பேரரசிடம் சென்றடைந்தது. 1832இல் தமிழர்களின் வன்னிச் சிற்றரசை பிரித்தானிய காலனித்துவ அரசு வெற்றி கொண்டதன் பின்னரே 1833இல் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் தமிழர்களின் இறைமையும் சிங்களவர்களின் இறைமையும் உள்ள தனித்தனியான அரசுக்களின் எல்லைகளை இணைத்தது.

இவ்விணைப்பில் இலங்கைத் தமிழ் மக்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக இயல்புநிலைகள் கவனத்தில் கொள்ளாப்படவில்லை. இலங்கைத்தீவைத் தங்களின் சந்தை நலனுக்காகவும் ஆட்சிப்பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும்,ஒரே நாடாக சிலோன் என்னும் ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தனர். இதனால் ஈழத்தமிழர்களின் இறைமையும் சிங்களவர்களின் இறைமையும் சிலோன் என்னும் நாட்டின் இறைமையுள் இணைக்கப்பட்டது. ஆயினும் தமிழர்களதும் சிங்களவர்களதும் இறைமையின் தனித்தன்மைகளை மதித்து 1833இல் சிலோனின் சட்டவாக்க சபைக்கு ஒரு தமிழரையும், ஒரு சிங்களவரையும் பிரதிநிதிகளாக நியமித்தமை முக்கியமான வரலாறாக உள்ளது.

தங்களால் பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், கொக்கோ பயிர்ச்செய்கையால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் வேலை செய்வதற்காகத் தங்களின் ஆட்சியில் இருந்த தமிழகத்தில் இருந்து இலட்சக்கணக்கில் தமிழ்த் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு வந்தனர். பிரித்தானிய காலனித்துவ அரசின் இம்முயற்சியால் சிங்களவர்கள் நிலமிழந்தமையும், தமிழ்த் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்புகள் வழங்கப்படாமையும், இலங்கையில் இனத்துவ அரசியல்,மொழித்துவ வேறுபாடுகள் வழியான வெறுப்பு அரசியல் உருவாக வழிவகுத்தது. அத்துடன் இலங்கைத் தமிழர்களையும் குடிவரவு பெற்றவர்கள் என உலகம் கருதும் தவறான போக்கையும் தொடக்கி வைத்தது.

1910இல் பிரித்தானியக் காலனித்துவம் ஆங்கிலம் படித்தவர்களுக்கும் சொத்துடமையுள்ளவர்களுக்கும் மட்டும் வாக்குரிமை என மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையை வழங்கி அத்தகைய சட்டசபைப் பிரதிநிதிகள் மூலம் கற்றோர் குழாத்தின் சனநாயகத்தைச் சிலோனில் உருவாக்க விரும்பினர். இந்த கற்றோர் குழாத்தின் பிரதிநிதியாகவே சேர். பொன்னம்மபலம் இராமநாதன் என்னும் தமிழர் சட்டசபையின் உறுப்பினரானார்.

இந்த கற்றோர் குழாத்து சனநாயகம் இலங்கைத்தீவின் பெரும்பான்மை மக்களான சிங்கள தமிழ் சாதாரண மக்களின் அரசியல் பங்களிப்பைப் புறந்தள்ளியது. இதனை ஊக்கப்படுத்தக் கூடிய வகையில் ‘சிலோனிஸ் தேசியம்’ என்னும் ஆங்கிலமொழி பேசும் ஆங்கிலப்பண்பாட்டாக்கம் அடைந்த தேசியத்தை நிலைப்படுத்தப் பிரித்தானிய காலனித்துவம் தங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் முயற்சித்த போதிலும் அதில் வெற்றிபெறவில்லை.

1920 களில் மன்னிங் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் வழி இனவாரியான பிரதிநிதித்துவமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தனர். இதனால் இலங்கையின் கரையோரச் சிங்களவர், கண்டிச்சிங்களவர், இலங்கைத் தமிழர்கள், தமிழ்மொழி பேசும் முஸ்லீம்கள்,மலையகத்தமிழர்கள் என்னும் ஐவகை மக்கள் இடையிலும் தலைமை போட்டிகள் ஏற்பட்டுத் தேசிய முரண்பாடுகள் வேகம் பெற்றன.

1924இல் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் சட்டவாக்கசபையில் சிங்களவர்களின் பிரதிநிதித்துவத்தை மற்றைய இனங்களின் பிரதிநிதிகளை விட அதிகரிக்கச் செய்ததினால் சட்ட உருவாக்கத்தில் சிங்களப் பெரும்பான்மை பலம் வளரச் செய்தனர்.

1931இல் இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்பாட்சியை வழங்கிய டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தம் எல்லா மக்களுக்கும் வாக்குரிமையை அறிமுகம் செய்தது. ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களாக வாழ்ந்த தமிழர்களின் இறைமைக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியது.

இதனால் இலங்கையின் மற்றைய மகாணங்களில் வாழ்ந்த பெருந்தொகையான சிங்களவர்கள் வாக்குரிமை பெற்ற பொழுது,சிங்களவர்கள் உடைய பெரும்பான்மையினச் சட்டசபை ஆட்சி உருவாகியது. அத்துடன் ஒரு தமிழரே கூட இல்லாத சிங்களப் பெரும்பான்மை அமைச்சரவையும் உருவாகச் செய்தது.

இது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள், ‘எங்கள் நாடு,எங்கள் இனம், எங்கள் ஆகமம் (பௌத்தம்)’ இவை மட்டுமே இலங்கையில் இருக்க வேண்டும் எனச் செயற்படும் அரசியலை தொடக்கின.

சிங்கள பௌத்த வெறி கொண்டெழுந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் இலங்கைத் தமிழர்களை அரசின் எல்லாநிலைகளிலும் இனஒதுக்கல் செய்வதின் வழியாகவும், தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றி,தமிழர்களுக்கு மேல் வன்முறைகளுடன் கூடிய இனவெறித்தாக்குதல்களை நடாத்தியதால், இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் தாயக எல்லைகளைச் சுருக்கிச் சிங்களவர்களின் குடியேற்ற பூமியாகத் தமிழர்களின் நிலவளப்பிரதேசங்களையும் கடல்வளப் பிரதேசங்களையும் ஆக்கிரமித்தது.

தமிழரின் சனத்தொகையினைக் குறைத்துச் சிங்களப் பிரதிநிதிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் உருவாகச் செய்தும், சிங்கள தமிழ் தேசங்களிடை இயல்பாகவே எல்லைகளாக இயற்கை அமைத்திருந்த காட்டெல்லைகளை விவசாயத்திற்காக காடழிப்பு என்ற பெயரில் அழித்து சிங்கள நாடாக மாற்றியும், தமிழர்களின் இறைமை மேலான ஆக்கிரமிப்புக்களைச் சிங்களவர்கள் வேகப்படுத்தினர்.

இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்கவென நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன்பாகத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம்,தமிழ்த் தலைமை பிரித்தானிய காலனித்துவ அலுவலகச் செயலாளர்களைச் சந்திக்க அனுமதிக்காத வகையில்; இலண்டனில் இருந்த பெருந்தோட்ட உற்பத்தி விற்பனை வழியான ரிசேர்வ் நிதியினை சிங்களத் தலைமைகள் பிரித்தானியாவுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துத் தடைசெய்தனர்.

இதனால் தமிழர்களின் இறைமை குறித்து அக்கறையற்ற முறையில் சோல்பரி அரசியலமைப்பு எழுதப்பட்டாலும், 29(2) விதியின் படி சிறுபான்மை இனத்துக்கோ அல்லது மதத்திற்கோ எதிரான சட்டங்கள் சிலோன் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டால் பிரித்தானிய உயர் நீதியமைப்பான பிரிவிக் கவுன்சிலுக்கு நீதி கோரி விண்ணப்பிக்கலாம் என்னும் அரசியலமைப்புப் பாதுகாப்பு ஒன்றினை பிரித்தானியா வழங்கியது. இந்தப் பாதுகாப்பு உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இலங்கைத் தமிழர்களின் இறைமை சிங்கள இறைமையுடன் பகிரப்படுகின்ற ஒற்றறையாட்சிப் பாராளுமன்ற முறைமை மூலம் சிலோனுக்குச் சுதந்திரம் 04.02.1948இல் வழங்கப்பட்டது.

சோவியத் இரஸ்யா, சிலோன், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாவதற்கு விண்ணப்பித்த பொழுது, சோல்பரி அரசியலமைப்பால் சிலோனின் இறைமை தொடர்ந்தும் பிரித்தானியாவின் மேலாண்மையில் இருப்பதால் அதனைத் தனி உறுப்பு நாடாக அங்கீகரிக்க முடியாது என 1948 முதல் 1956 க்கு இடை இரண்டு தடவைகள் தனது இரத்து உரிமை அதிகாரத்தை – வீட்டோ அதிகாரத்தைப் – பயன்படுத்தி தடை செய்தது. எனவே தமிழர்களின் இறைமை முற்று முழுதாக ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்துக்குப் பாரப்படுத்தபடவில்லை என்பதற்கு இது ஒரு உலகச் சான்றாக அமைந்தது.

சோல்பரி அரசியலமைப்பின் அடிப்படையில் 1956 ஆம் ஆண்டின் சிங்கள மட்டும் சட்டத்தால் வேலையிழந்த கோடிஸ்வரன் அவர்கள் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் மேன்முறையீடு செய்த பொழுது அதனை விசாரித்த உயர் நீதியமைப்பு அவரை வேலை நீக்கம் செய்தது தவறு எனவும்,அவருக்கு நட்டஈடு கொடுத்து மீளவும் வேலைக்குச் சேர்க்கும் படியும்,அத்துடன் ‘சிங்களம் மட்டும் சட்ட’த்தைப் பாராளுமன்றம் மீளப்பெற்று சோல்பரி அரசியலமைப்புக்கு ஏற்பத் திருத்தங்களுடன் மீளச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது.

இதனைச் செயல்படுத்த மறுத்த சிங்கள பௌத்த பேரினவாதத் தலைமைகள் 1970ம் ஆண்டுத் தேர்தலில் தமக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சி அமைத்தல் வழி, தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த தமிழ்ப்பிரதிநிதிகள் பங்குபற்றாத பாராளுமன்றத்துக்கு வெளியே நிறுவப்பட்ட அரசிலமைப்பு நிர்ணய சபை மூலம் சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசை நிறுவி, மாட்சிமைக்குரிய பிரித்தானிய மகாராணியின் தலைமையில் இருந்து விலகி சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தினர்.

இதனால் தமிழர்களின் இறைமை மீளவும் தமிழர்களிடமே மீண்ட இயல்பான நிலையில் இலங்கைத் தமிழர்கள் நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்டனர்.
எனவே தமிழர்களின் நாடற்ற தேச இனம் என்கிற நிலை உள்நாட்டுப்பிரச்சனையல்ல. காலனித்துவப் பிரச்சினையாக ஐக்கியநாடுகள் சபையால் பார்க்கப்பட வேண்டிய ஒரு சர்வதேசப் பிரச்சினை. சர்வதேசத் தலையீட்டால் தீர்க்கப்பட வேண்டிய உலகப்பிரச்சினை.

இந்த உண்மையை உலகுக்கு அறிவிக்க அன்றையத் தமிழ்த்தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறை பாராளுமன்றத் தொகுதியை இராஜினாமாச் செய்து,தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் தன்னாட்சி அதிகாரத்தினைப் பிரயோகிப்பதற்கான அடையாளக் குடியொப்பமாக மாற்றி, ஒன்பதினாயிரத்துக்கு மேற்பட்ட மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று,தமிழர்களின் தன்னாட்சிக்கான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்.

1975இல் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடம் நாமிழந்த எங்கள் அரசியல் உரிமைகளை மீளவும் நாங்கள் பெறவென எடுத்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப்போனதால், இனி நாங்கள் எங்களுடைய பிரிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், எங்களுடைய அரசியல் எதிர்காலத்தை நாங்களே நிர்ணயம் செய்வோம் எனப் பிரகடனப்படுத்தி சிறிலங்காப் பாராளுமன்றத்தை நிராகரித்து அதிலிருந்து விலகினார்.

1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் தனியான பாதுகாப்பான அரசினை நிறுவுதற்கு தீர்மானித்து 1977 தேர்தலை இதற்கான குடியொப்பமாக அறிவித்து,அத்தேர்தலில் அத்தீர்மானத்திற்குப் போதிய மேலதிக வாக்குகளைப் பெற்றனர். இந்த முடிவை சிறிலங்கா சனநாயக முறைகளில் அடைவதைத் தடைசெய்தால் எந்த வழிகளிலும் அடைவோம் எனவும் அத்தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக அறிவித்திருந்தனர்.

இதுவே ஈழத்தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தை அளித்தது. தேசியத்தலைவர் ஒருவரின் உருவாக்கத்தை இயல்புபடுத்தி, மக்களே தங்களுக்கான பாதுகாப்புப்படையாகி, அவர் தலைமையில் தம்மாலியன்ற வழிகளில் எல்லாம் போராட வைத்தது.

ஆனால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர்களின் சனத்தொகையில் பத்திலொரு பகுதிக்கு மேற்பட்ட மக்களை இனஅழிப்பால் கொன்றொழித்து, இன்று வாழுகின்ற ஈழத்தமிழர்களையும், இனங்காணக் கூடிய அச்சத்துக்கு உள்ளாக்கி, மீளவும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பண்pவை அவர்களின் விருப்புக்கு மாறாக ஆயுதபடைபலத்தால் பெற்று வருகின்றனர். இதுவே இன்றைய அரசியல் எதார்த்தமாக உள்ளது.

இந்நிலையில் நாடற்ற தேசஇனமாக, தங்களை ஆளும் சட்டத்தகுதியை இழந்த அடக்குமுறை ஆட்சியான சிறிலங்கா ஆட்சியுள்,49 ம் ஆண்டில் கால்வைத்துள்ள ஈழத்தமிழ் மக்களுக்கான, குடியொப்பம் ஒன்றை நடாத்தி,அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைச் சிறிலங்காவுடன் தொடரவிரும்புகின்றார்களா இல்லையா என்பதை உலகம் உறுதி செய்தால் மட்டுமே,அவர்களின் நாடற்ற தேசஇன நிலை மாறும்.
இதற்கு உலகெங்கும் தேசங்கடந்துறை மக்களாகவும்,உலக நாடுகள் பலவற்றின் குடிகளாகவும் உலகத் தமிழினமாக உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு உழைத்தாலே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளும்.

Exit mobile version