ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம்

ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள ஆய்வு நிலையிலும் உறுதிப்படுத்தி வருவதை உலக நாடுகளும், அமைப்புகளும் நன்கறிவர்.

இந்நிலையில், ஈழமக்களின் இந்த நாளாந்த வாழ்வியலை வார்த்தைப்படுத்தி, உள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்தும் ஊடகத் தலைமைகளோ, அரசியல் தலைமைகளோ இல்லாதிருக்கிறது. இதனாலேயே 21ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றின் மிகக் கொடிய மனித இனஅழிப்பு என்று வரலாறு பதிந்துள்ள முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நடைபெற்று 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இன்றைய சூழலிலும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் அதீத மனிதாய தேவைகளுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான அனைத்துலகச் சட்டங்கள் வலியுறுத்தும் நிலைமாற்ற நீதியோ துயர் மாற்றும் பொருளாதார சமூக உதவிகளோ இல்லாத மக்களாக சிறீலங்காப் படைகளால்  வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களை எண்ணி எண்ணி ஏங்கிச் சாகும் சமுதாயமாகத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை பதினொரு ஆண்டுகளாக ஈழத்திலும், புலம்பெயர் நிலங்களிலும் ஈழத்தமிழர்கள் மேல் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் பலவழிகளில் பல குழுக்களாகத் தாங்கள் ஏதேதோ ஈழத்தமிழர்களுக்காகச் செய்கின்றார்கள் என்ற செய்திகளும், தகவல்களும், பதிவுகளும் கூட நிறைய உண்டு. ஆயினும் இவற்றின் பலன் சிறீலங்கா 2009 வரை ஒரு தீவுக்குள் இரு நாடுகள் என உலகமே ஏற்றுக் கொண்ட ஈழத்தமிழ்த் தேசத்தை அதனுடைய மக்களை இனஅழிப்பு செய்த கோத்தபாய ராஜபக்சா தலைமையிலான   அதே தலைமை தற்போது ஈழமண்ணின் மானிடவியல், தொல்லியல், சமூகவியல் அடையாளங்களை அதன் வரலாற்றுக்கு முற்பட்ட தன்மை சனநாயகத்தின் வழி உண்மைகள் மீள்நிறுவப்பட உதவும் என்ற அடிப்படையில் பண்பாட்டு இனஅழிப்பு செய்து வருகிறது. கூடவே தமிழர் தாயகங்களில் ஈழத்தமிழ் மக்களின் பாராளுமன்ற சட்டவாக்கப் பிரதிநிதித்துவ உரிமையை மேலும் குறைவடையத்தக்க வகையில் குடித்தொகையில் சிங்கள பெரும்பான்மையை நிலைபெறக் கூடிய முறையில் அனைத்தையும் செய்து வருகின்றது. கூடவே வடை, தோசை சாப்பிட்ட ஈழத்தமிழர்களுக்குத் தாங்களே பிட்சா சாப்பிடப் பழக்கியதாக நீதிமன்றங்களிலேயே பெருமை பேசி ஈழத்தமிழர்களின் பண்பாட்டையே தாம் மாற்றி வருவதை அவர்களின் வளர்ச்சியாக வாதிடவும் செய்கின்றனர்.

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்றால், வள்ளுவர் அதற்கான தெளிவான பதிலைச் சுருக்கமாகத் தருகின்றார். “பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்கும் – கொல் குறும்பு மில்லது நாடு” என்னும் வள்ளுவம் எமக்குள் நாம் பல்குழுவாக உள்ளமையும், பகைமை கொண்டவர்களாக வாழ்வதும் எங்கள் மண்ணில் அரசனே அஞ்சும் அளவுக்கு கொலைத்தனமான வாழ்வு தொடர அனுமதிக்கிறோம் என்கிற உண்மையை உணர்த்துகிறது. எனவே ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் தமக்குள் பொதுக் கொள்கை, பொது வேலைத்திட்டம் என்பவற்றை மக்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாத நிலையில் ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தனிமனித விருப்பு வெறுப்புகளைப் பொதுவாழ்வில் வெளிப்படுத்தும் சீர்கேட்டை நிறுத்த வேண்டும்.

அவ்வாறே தோல்வி கண்ட உணர்வினராக துன்பக்காலத்தை நோக்காது அதனை மாற்றும் ஆற்றலை உருவாக்கும் காலமாக இக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். “தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் – செல்வருஞ் சேர்வது நாடு” என்று வள்ளுவர் கூறியுள்ளாரே தவிர, ஆட்சி குறித்தோ அதிகாரம் குறித்தோ ஏன் எல்லைகள் குறித்தோ வள்ளுவர் கூறவில்லை. எனவே நமது மக்கள் தமது மண்ணில் தள்ளாவிளையுளைப் பெற்றுப் பொருளாதார வளம் பெறவும் வாழ்வதற்குத் தக்காராகத் தம் அறிவையும், ஆற்றலையும் வளர்ப்பதற்கும் நிதி வளம் குன்றாது வாழ்விக்கும் செல்வர்கள் அங்கு உருவாவதற்கும் உழைப்பதே எமது ஈழமண்ணினதும் மக்களினதும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியாக வேகமாகத் தொடர்வறாது செய்யப்பட வேண்டும். இதற்கான கூட்டுத் தலைமைகள் புலம்பெயர் ஈழத்தமிழரிடை வளர்க்கப்பட வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார இலக்காக அமைகிறது.