ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரானில், மாஷா அமீனி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் அண்மைக்காலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு முதல் தடவையாக இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மோஹ்சென் ஷேகாரி என்பவரே தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படை அங்கத்தவர் ஒருவருக்கு காயமேற்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 25 ஆம் திகதி, தெஹ்ரானிலுள்ள சத்தார் கான் வீதியை மறித்து, பாதுகாப்புப் படை அங்கத்தவர் ஒருவருக்கு கத்தி மூலம் காயம் ஏற்படுத்திய மோஹ்சென் ஷேகாரி எனும் ஆர்ப்பாட்டக்காரருக்கு இன்று காலை மரண தண்டனை விதிக்கப்பட்டது என ஈரானிய நீதித்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபருக்கு மரண தண்டனை விதித்து கடந்த நவம்பர் முதலாம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால், அத்தீர்ப்பை நவம்பர் 20 ஆம் திகதி ஈரானிய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது எனவும் மேற்படி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.