ஈராக்கில் மோதல் – இறந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஈராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டங்கள் இந்த வாரம் தீவிரமடைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை(1) பாஸ்ரா பகுதியில் இடம்பெற்ற மேதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், இந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக்கின் எண்ணை உற்பத்தி பிரதேசமான பஸ்ரா பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்த்தப்பா அல் சடார் பிரிவினரில் இருவரும், அசைப் அல் அல்ஹக் பிரிவை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

சியா இன முஸ்லீம் மக்களின் தலைவர் முக்டாடா அல் சடர் அரசியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஈராக்கில் அரசியல் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல்கள் சியா இன மக்களிடம் உள்நாட்டு போரை ஏற்படுத்தலாம் என்ற அச்சங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் ஆரம்பத்தில் ஆரம்பமாகிய மோதல்களில் 700 பேர் காயமடைந்துள்ளதுடன், போராட்டக்காரர்கள் அரச தலைவரின் இல்லம் உட்பட பல அரச கட்டிடங்களை கைப்பற்றியிருந்தனர்.

ஏற்கனவே போர் மற்றும் பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில் தற்போதைய மோதல்கள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக புதிய அரசை உருவாக்குவதே தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு என அசைப் அல் அல்ஹக் இன் தலைவர் தெரிவித்துள்ளார்.