இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்கா

இஸ்ரரேலின் சட்ட விரோத குடியேற்றங்களை அனுமதிக்குமாறு கோரி அமெரிக்கா வெளியிட்டுள்ள பிரகடனத்தை பலஸ்தீன் வன்மையாக கண்டித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது என பலஸ்தீன் பாராளுமன்றத்தின் பதாஹ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  அரசின் இராஜதந்திரியான  சஈத் மொஹமட் ஸாலிஹ் எரகத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரகடனம் சர்வதேச சட்டத்தை காட்டுச் சட்டமாக மாற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் முன்னெடுத்த பலவந்த சட்டவிரோத குடியேற்றங்களை அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவித்து அமெரிக்கா பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்த குடியேற்றங்களை தொடர்ந்தும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று பார்க்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.

மேற்குக் கரையின் அந்தஸ்த்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பேச்சுவார்த்தையிலேயே தங்கி இருப்பதாகவும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த மாற்றத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலேயே இந்த இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தப் பிரச்சினை இஸ்ரேல், சர்வதேச சமூகம் மற்றும் பஸ்தீனத்திற்கு இடையே தொடர்ந்து நீடித்து வருகின்றது.

“அனைத்து தரப்புகளினதும் சட்ட வாதங்களை உன்னிப்பாக அவதானித்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று பொம்பியோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேற்குக் கரையில் நிறுவப்பட்டிருக்கும் இஸ்ரேலிய யூதக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று பார்க்க முடியாது என்று அமெரிக்கா முடிவுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சட்டவிரோதமாக சுமார் 140 குடியேற்றத் திட்டங்களின் கீழ் 600,000 யூதர்கள் வரை வசித்து வருவதாக கூறப்படுகின்றது.  சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் பரவலாக சட்டவிரோதமானதென்றே கருதப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

இந்த யூதக் குடியேற்றங்கள் தமது சுதந்திர நாட்டில் அமைக்கப்பட்டிருப்பதால் அவைகள் நீக்கப்பட வேண்டும் என்று பலஸ்தீனம் வலியுறுத்தி வருகிறது.