Home ஆய்வுகள் இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா?

இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா?

பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்கள் மிகவும் குரூரமாகக் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்த, பப்ரிஸ்ற் கிறிஸ்தவ பிரிவினருக்குச் சொந்தமான மருத்துவமனை மீது, இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், காஸாவின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் போரில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பாலஸ்தீனத்திலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் உடனடியாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது மட்டுமன்றி, அமெரிக்க அதிபருடன் எகிப்திய, ஜோர்தானிய, மற்றும் பாலஸ்தீனத் தலைவர்கள் முன்னெடுக்கவிருந்த உச்சிமாநாட்டை அவர்கள் திடீரென ரத்துச்செய்வதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது

Gaza Hospital இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா?
குறிப்பிட்ட மருத்துவமனை மீது மிகவும் மோசமான வகையில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அதே நாள், ஐக்கிய நாடுகளினால் நடத்தப்பட்டு வந்த ஒரு பாடசாலை மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, குறைந்தது ஆறு பொதுமக்களாவது அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்கள். ‘தற்பாதுகாப்பு’ என்ற போர்வையில், காஸாப் பிரதேசத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த இனவழிப்புப் போரின் மிக மோசமான மனிதாயப் பின்விளைவுகளை இந்தத் துன்பியல் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. பாலஸ்தீன மக்களின் உயிர்களை எந்தவிதத்திலும் பொருட்படுத்தாமல், தமது இராணுவ பலத்தை விகிதாசாரமற்ற வகையிலும் அப்பாவிப்பொதுமக்களின் அழிவுகளைக் கணக்கெடுக்காமலும் பாலஸ்தீன மக்கள் மீது பல வருடங்களாகப் பிரயோகித்து வருகின்ற இஸ்ரேல் அரசின் நீண்ட வரலாற்றையும் நினைவுபடுத்தியிருக்கிறது.

பாலஸ்தீன ஊடகவியலாளரான ஷெரீன் அபூ அக்லேயை (Shireen Abu Akleh)  சுட்டுக்கொன்றுவிட்டு எவ்வாறு திசைதிருப்பும் செய்திகளை வெளியிட்டார்களோ, அதே போல ‘மருத்துவமனை மீதான குண்டுத் தாக்குதல் பாலஸ்தீனத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது’ என்று சொல்லி, இஸ்ரேல் தற்போதும் குழப்பமான செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

இவ்வாறான குழப்பங்களுக்கும் சாவுகளுக்கும் அழிவுகளுக்கும் நடுவில் இப்படிப்பட்ட பைத்தியகாரத்தனமான நிலைக்கு நாம் எப்படி வந்துசேர்ந்தோம் என்பதை நாங்கள் இலகுவில் மறந்துவிடலாம். முடிவற்ற இரத்தக்களரிகளும், தொடரும் குற்றச்சாட்டல்களையும் எவ்வாறு புரிந்துகொள்வது என்று தெரியாமல் இந்த வரலாற்றை அறியாதவர்கள் குழப்பமடைவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. பன்னிரண்டு போர்கள், எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அமைதி முயற்சிகள், எத்தனையோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்பவை இந்தப் பிரச்சினைக்கு எந்தவித முடிவையும் கொண்டுவராத சூழலில், இப்பிரச்சினை உண்மையில் என்றோ ஒரு நாள் தீருமா என்று அனைவரும் அங்கலாய்ப்பதைக் காணமுடிகிறது.

அதனால் தான் அழிவும் குழப்பமும் நிறைந்த இந்தப் பின்புலத்தில், இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து கொதிநிலையில் வைத்துக்கொண்டிருக்கும் காரணிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைத் மிகவும் தெளிவாக அடையாளம் காண்பது முக்கியமானதாகும். இஸ்ரேலைப் பொறுத்தவரையில் இது தனது நாட்டின் ‘பாதுகாப்புப் பிரச்சினை’ என்று அழைக்கின்ற அதே நேரம், பாலஸ்தீன மக்களோ பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இதனைத் தமக்கான உரிமைப்பிரச்சினையாகக் கருதுகிறார்கள்.

இவ்வாறான ஒரு முக்கிய முரண்பாட்டின் காரணமாக, இது ஒரு காலப்போக்கில் ஒரு பகுதியின் வெற்றி மற்றைய பகுதிக்கு இழப்பைத் தரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கான நீதியை வழங்குவதை எந்தவிதத்திலும் கருத்திற்கொள்ளாது, தமது நாட்டின் பாதுகாப்புக்கு மட்டும் இஸ்ரேல் அதிமுக்கிய இடத்தைக் கொடுத்திருப்பதனால், எந்தவிதத்திலும் தீர்வு காண முடியாத ஒரு பிரச்சினையாக இந்தப் பிரச்சினை காலப்போக்கில் மாறியிருக்கிறது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவாக்கப்பட்ட நாள் தொடங்கி, இராணுவ ரீதியாக இருந்தாலும் சரி, அல்லது இராணுவத் தொடர்பற்ற விடயங்களிலும் சரி, பாலஸ்தீன மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் எந்தவிதத்திலும் கருத்திற் கொள்ளாமல், தமது பாதுகாப்பை மிகவும் விரிவான வகையில் இஸ்ரேல் வரையறை செய்திருக்கிறது. பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, அந்த நாட்டை உருவாக்கிய பின்னர், இந்தச் சிறிய காலனீய சக்தி, தமக்குச் சாதகமற்ற ஓர் உலகில், தம்மை எதிர்க்கும் ஒரு பிரதேசத்தில், அடக்குமுறைக்கு அடிபணியாது போராடும் ஒரு பூர்வீக மக்கள் கூட்டத்தின் நடுவில், உண்மையானதும் கற்பனையானதுமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கியிருக்கிறது.

போரை முன்னெடுப்பதற்கும், அதற்கு ஆயத்தம் செய்வதற்கும், தமது தேசம் தாபிக்கப்பட்ட நாள் முதல் இஸ்ரேல் முன்னுரிமை கொடுத்துவருகிறது. போர் அவசியமில்லாத தருணங்களில் கூட போர் அவசியம் என்று அவர்கள் வாதிட்டார்கள். தமது மூலோபாய ஆழம், தமது மிகச் சிறிய சனத்தொகை, என்பவற்றைக் கருத்திற்கொண்டு, போரில் தாம் தோல்வியை அடைய நேர்ந்தால் அதுவே தமது ஒட்டுமொத்த அழிவாக இருக்கும் என்று கருதிய இஸ்ரேல், எல்லாவற்றுக்கும் மேலாக, தமது இராணுவ மேலாண்மையை உறுதிப்படுத்துவதிலும், எந்தவிதமான போரையும் முன்கூட்டியே தவிர்ப்பதை தமது மூலோபாயமாகவும் அதே நேரம் அணுவாயுத தடுப்;பையும் கொண்டிருப்பதிலுமே நோக்காக இருந்தார்கள்.

ஒரு முரட்டுத்தனமான இராணுவக் கொள்கையை உருவாக்கிய இஸ்ரேல் 1948, 1956, 1967 போன்ற வருடங்களில் மூன்று போர்களை வெற்றிகொண்டது. இவற்றுக்குப் பின்னர் பாதுகாப்பைப் பேணுகின்றோம் என்று சொல்லி வரலாற்றுப் பாலஸ்தீனத்தில் வாழும் பல மில்லியன் எண்ணிக்கையிலான பாலஸ்தீன மக்கள் மீது என்றும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு உட்பட நிரந்தரக் கட்டுப்பாட்டைப் பேணிவருகிறது.

பன்னாட்டுச் சட்டங்களை முழுமையாக மீறி, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அநீதிகளை இஸ்ரேல் தொடர்ச்சியாகவே முன்னெடுத்துவருகிறது. 194ம் இலக்கத்தைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் தீர்மானத்துக்கு முற்றிலும் எதிர்மாறாக, பாதுகாப்பைக் காரணங்காட்டி, பல மில்லியன்கள் பாலஸ்தீன ஏதிலிகளையும், அவர்களது வாரிசுகளையும் தங்களது இல்லங்களுக்கும் தாயகத்துக்கும் திரும்ப முடியாமல் இஸ்ரேல் தடுத்துவருகிறது. குடிப்பரம்பலில் யூத மக்களே பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்பதைப் பேணுவதற்காக யூத மக்களைக் குடியேற்றுவதற்காக பாலஸ்தீன மக்களின் நிலங்களையும் இஸ்ரேல் பறிமுதல் செய்திருக்கிறது.

அதே போல, 1967ம் ஆண்டுப் போருக்குப் பின்னரும் அதைத் தொடர்ந்து தாம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் பின்னரும், பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை இஸ்ரேல் குடியிருத்தியது. அதன் பின்னர், அந்த யூத குடியிருப்பாளர்களின் சட்டவிரோத பிரசன்னத்தைக் காரணங்காட்டி, ஓர் அடக்குமுறை இராணுவத்தை அங்கு நிலைநிறுத்தியது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் முன்வைத்தபடி, ‘இஸ்ரேலிய இராணுவம் அப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையத்தின் வேண்டுகோளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றுப் போனது.

1993இல் பாலஸ்தீனர்களுடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ரீதியிலான அமைதி ஒப்பந்தங்களின் பின்னரும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் தொடர்ந்தும் யூத குடியிருப்பாளர்களைக் குடியேற்றினார்கள். அவ்வாறு குடியேற்றப்பட்ட யூத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தற்போது ஏழு இலட்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்தப் புதிய குடியேற்றங்களை உள்ளடக்கும் வகையில், தமது தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பாரிய அளவில் விரிவாக்க வேண்டிய அவசியம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது. இவ்வளவும் பாலஸ்தீன மக்களின் உயிர்கள், அவர்களது நிலம், அவர்களது மாண்பு அவர்களது நலன் என்பவற்றின் மேல் தான் எட்டப்பட்டது.

தனது சட்டவிரோத குடியேற்றங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாலஸ்தீன மக்களின் பிரதேசத்தை மண்டலங்கள் (cantons) என்ற பெயரில் 202 துண்டுகளாக்கி, ஓர் இனத்துவப் பாகுபாட்டு ஒழுங்கமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கான பாலஸ்தீன மக்களின் வாய்ப்புகளும் குறைக்கப்பட்டன.

குடியேற்றங்களை நிறுவிய ஏனைய காலனீய சக்திகளைப் போன்று, இஸ்ரேலின் இராணுவக் கொள்கைக்கான மூலோபாய அணுகுமுறை எவ்வளவுக்கு ஆபத்தானதோ, அவ்வளவுக்கு அதன் பாதுகாப்பு தொடர்பான கொள்கை ரீதியிலான அணுகுமுறையும் ஆபத்தானதே. எதையெடுத்தாலும் ‘பாதுகாப்பு’ என்ற போர்வையிலே தான் அவர்கள் பார்ப்பார்கள். பாதுகாப்பின் முன்னர் மற்றையவை அனைத்துமே அடிபட்டுப் போய்விடும். அனைத்துக்கும் அது தான் விளக்கம். அனைத்தையும் அதுவே நியாயப்படுத்தும். பாதுகாப்பின் முன் எந்த விமர்சனத்துக்கோ மாற்றுக் கருத்துக்கோ இடமில்லை.

கேள்விகள் எல்லாவற்றுக்குமே அது ஒன்று தான் பதில், ஏன் அங்கு கட்டடம் கட்டாமல் இங்கு
கட்டப்படுகிறது? பாதுகாப்பு. ஆக்கிரமிப்பு ஏன் தொடரப்படுகிறது? பாதுகாப்பு. யூத குடியேற்றங்கள் ஏன் விரிவாக்கப்படுகின்றன? பாதுகாப்பு. இரத்தக்களரி ஏன் முன்னெடுக்கப்படுகிறது? பாதுகாப்பு. போரோ அமைதியோ இல்லாத நிலை பேணப்படுவது ஏன்? பாதுகாப்பு.

உண்மையில் பாதுகாப்பு அரச கொள்கையாகப் பரிமாணம் பெற்றது. காலனீய யதார்த்தத்துக்கு சியோனிசம் (Zionism) கொடுக்கும் பதில் அது தான். இஸ்ரேல் எதனைப் ‘பாதுகாப்பு’ என்று அழைக்கிறதோ அதனையே பாலஸ்தீனர்கள் ‘மேலாதிக்கம்’ என அழைக்கிறார்கள். உண்மையில் காவல்துறை, இராணுவம், புலனாய்வு, கண்காணிப்பு போன்ற அனைத்தையுமே பாதுகாப்பு என்ற ஒன்று தான் கடந்து சென்றது. மக்கள் பரவல், குடிபெயர்வு, குடியமர்த்துதல், நிலச் சுவீகரிப்பு மற்றும் இறையியல், தொல்பொருளியல், கொள்கையாக்கம், பரப்புரை என்பவை அனைத்தையும் உள்ளடக்கிய மேலாதிக்க, இனவாத கொள்கைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

இஸ்ரேலின் இராணுவ பலம், தடுப்பு, தவிர்ப்பு, முன்கூட்டிய தாக்குதல் போன்றவற்றை நியாயப்படுத்தும் காரணிகளாக இவைகள் அமைந்தன.

பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு, இஸ்ரேல் மேற்கொள்ளும் விகிதாசாரமற்ற அணுகுமுறை எந்தவிதத்திலும் அந்த மக்களைப் போராட்டத்தின் பாதையிலிருந்து திசைதிருப்பவில்லை. பாலஸ்தீன மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துன்பங்கள் அதிகமாக விரக்தியையும் கோபத்தையும் அந்த மக்கள் நடுவில் தோற்றுவித்திருக்கிறது. அதனையே காஸாவில் இந்த மாதத்தில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான தனது சட்டவிரோத குடியேற்றவாசிளை 2005 இல் மீள அழைத்து, காஸாவுக்கு வெளியே தங்களது படைகளை நிலைநிறுத்திய பின்னர், அங்கு ஒரு முற்றுகையை ஏற்படுத்தி, மிகச் செறிவாக மக்கள் வாழுகின்ற அந்தப் பிரதேசத்தில் அநீதியான, மனிதாயமற்ற தடைகளை ஏற்படுத்தி, இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும், பாலஸ்தீனத்தின் தென்பகுதியிலிருந்து, ஏதிலிகளாக இடம்பெயர்ந்து அங்கு வாழும் 2.3 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையில் தாங்கொணாத துன்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பதினெட்டு வருடங்கள், ஐந்து போர்கள், பல்லாயிரக்கணக்கான மக்களின் இழப்புகள் போன்றவற்றின் பின்னரும், தனது இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக, எப்போதுமே அழிவையும் துன்பத்தையும் எதிர்கொள்ளும் அந்தப் பாலஸ்தீனப் பிரதேசத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கியிருப்பதுடன், அங்கு வாழும் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தைத் தரக்கூடிய முழு அளவிலான தரைவழி ஆக்கிரமிப்புக்கும் ஆயத்தமாகி வருகிறது. இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும் இருக்கின்ற தமது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு பாலஸ்தீனத்துக்கு இருக்கின்ற உரிமையை மறுத்து, தனது மக்களை மட்டும் பாதுகாத்தால் போதும் என்ற இஸ்ரேலின் அணுகுமுறைக்கு இம்முறை அடிவிழுந்திருக்கிறது. இம் மாதம் அதனை மிகத் தெளிவாக நாங்கள் பார்த்திருக்கிறோம்.

இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அதனை யாருமே வெற்றிகொள்ள முடியாது போன்ற கட்டுக்கதைகள் தற்போது உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. இரத்தக்களரியைத் தோற்றுவிக்கின்ற பாதுகாப்பு அணுகுமுறையைத் தவிர்த்து, நீதி நிறைந்த அமைதியினூடாக பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதே சாலச்சிறந்ததாகும்.

காஸாவில் இஸ்ரேல் தனது இனவழிப்புப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பதை ஊக்குவிக்காமல், இவ்வாறான ஒரு யதார்த்தத்தையே தற்போது நடுநிலைமை வகிக்க வருகின்ற ஜோ பைடன் கருத்திற் கொள்ள வேண்டும்.

எனது உடன்பிறப்பும் முதிர்ந்த ஆர்வலருமான அஸ்மி பிஷாரா (Azmi Bishara) பாலஸ்தீனம்: உண்மையும் நீதியும், இந்தப் பிரச்சினைக்கு புதிய ஆக்கபூர்வமான தீர்வுகள் தேவையில்லை, ஒரு மக்களின் துன்பியல் வாழ்வுக்கான நீதி வழங்கப்படவேண்டும் (Palestine: Matters of Truth and Justice, at the heart of the conflict lies not a dilemma in need of creativity, but rather a tragedy in dire need of justice) என்பதாகும்.

இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணி, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும் அதன் காலனீய மனப்பாங்குக்கும் முடிவு கட்டுவதே எந்தவொரு நேர்மையான மத்தியஸ்தரும் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாக இருக்கும்.

இரு தரப்பையும் சமாதானப்படுத்துவது இங்கு முக்கியமல்ல. பாலஸ்தீன மக்களின் வரலாற்றை யதார்த்தமான முறையில் படிக்கின்றபொழுது, இப்படிப்பட்ட ஒரு முடிவுக்குத் தான் நாங்கள் வரமுடியும்.

தமிழில்: ஜெயந்திரன்

நன்றி: அல்ஜஸீரா

 

Exit mobile version