Tamil News
Home செய்திகள் இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்திறவாத மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்திறவாத மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

இந்த கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தபோதும் இலங்கை விவகாரங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இலங்கை இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த விடயம் குறித்தும் நேற்றைய உரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version