இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கான ஆதாரத்தை ஜனாதிபதி விளக்க வேண்டும் – தமிழ் அரசியல்வாதிகள்

யுத்தத்தில் காணாமல் போன 20,000 பேரும் இறந்து விட்டதாக சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ கூறியிருப்பதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பல அரசியல் சார்ந்தோர் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், பி.பி.சி ஊடகத்திற்கு தங்கள் கருத்தையும் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், காணாமல் போன ஒவ்வொருவர் தொடர்பாகவும் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக அரசு விசாரணைகளை நடத்தியிருந்தால், அது யாரால், எப்போது நடத்தப்பட்டன என்பதையும் அதன் முடிவுகளையும் ஜனாதிபதி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற வகையில், அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் என பொதுவாகக் கூறுவது தனது கடமைகளைத் தட்டிக்கழிப்பதாகவே தான் உணர்வதாகவும் கூறினார்.

வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கும் போது, 20,000 பேரும் உயிரிழந்து விட்டமைக்கான ஆதாரங்கள் என்ன உள்ளது. யுத்தத்தில் காணாமல் போனோர் மட்டுமின்றி, யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலைமை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தாம் இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் தற்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்ஸ. அவர் காணாமல் போனோரை கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடாமைக்கு காரணம் என்ன? அந்த அறிக்கையால் நியாயம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அந்த ஆணைக்குழுவினர் சில உண்மைகளை கண்டறிந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவின் இந்தக் கருத்தானது, உலகத்தை ஏமாற்றும் ஒரு நாடகம் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் இறுதிக்கட்ட யுத்ததத்தின் போது, இராணுவத்திடம் சரணடைந்தோரை நேரில் கண்ட இலட்சக் கணக்கான சாட்சியங்களும் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துத் தெரிவிக்கும் போது, தாம் யுத்தத்தில் காணாமல் போனோரை கேட்கவில்லை எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையே தாம் கேட்பதாகவும் கூறியுள்ளனர்.

யுத்தம் நிறைவடையும் தருணத்தில் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறியிருந்தார். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களை தாம் கோருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியவர்களை சரணடையுமாறு இராணுவம் அறிவித்த சந்தர்ப்பத்தில் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதற்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் தொடர்பாக ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தில் காணாமல் போனோர் அனைவரும் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி கூறுவது நியாயமான பதில் கிடையாது என சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.