Tamil News
Home செய்திகள் இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்தியப் பிரதமர் மோடி கையிலேயே உள்ளது – சீ.யோகேஸ்வரன்

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்தியப் பிரதமர் மோடி கையிலேயே உள்ளது – சீ.யோகேஸ்வரன்

இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கொடைக்கானலில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இவர், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தமிழ்நாட்டில்  கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர். அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் படித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. தமிழக அரசும், இந்திய அரசும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விருப்பப்படி இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின் இலங்கை அகதிகள் 15 இலட்சம் பேர் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கை தமிழ் மக்களுக்கும், இந்திய தமிழ் மக்களுக்கும் உறவு நீடிக்க வேண்டும் எனில் இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்த போது நாங்கள் கப்பல் போக்குவரத்து தொடங்குமாறு கேட்டோம். அவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்துக் கொடுப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றுவது பிரதமர் நரேந்திரமோடி கையில் தான் உள்ளது. அவர் நினைத்தால் இலங்கை மக்களுக்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்கலாம்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஓரளவிற்கு அமைதி நிலவியது. கடந்த ஏப்ரல் 21 இலங்கையில் உள்ள தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களில் அதிகம் பேர் தமிழர்கள்தான் என்றார்.

 

 

 

Exit mobile version