இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை

இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை எனத் தெரிவித்தமை குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்கள சமரவீரவை அவரது கருத்துக் குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இதை மங்கள உறுதிப்படுத்தினார். மங்கள சமரவீர வாக்கு மூலம் வழங்குவதற்காகச் சென்றவேளை அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் சென்றனர்.

ஒரு நோக்கத்துக்காக இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டமை இதுவே தல்தடவை என மாத்தறை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் மங்கள சமரவீர தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளையில், நாட்டில் பெரும்பாலான விடயங்களைச் சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்திக் கொள்வது தவறானவிடயமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இலங்கையின் பெரும்பாலான விடயங்களைச் சிங்கள பௌத்த பெயரில் அடையாளப்படுத்துவது முழுமையாகத் தவறான விடயமாகும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஹிந்தி மொழியே பெரும்பான்மை மொழியாகும்.

அதனால் அது ஹிந்தி நாடு என்று யாரும் கூறுவதில்லை. இந்தியாவுக்கு இந்தியா என்றே கூறுகின்றார்கள். அந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் காவி உடைகளை வியாபாரமாகச் செய்கின்ற தேரர்களும், பௌத்த மதம் குறித்து தெளிவில்லாத நபர்களுமே இதனை இன்று துரதிஷ்டவசமாக புரிந்து கொள்ளாது இருக்கின்றனர்.

இந்த சில தேரர்களினாலேயே பௌத்த மதத்தின் தோற்றப்பாடு நாளாந்தம் அழிவடைகின்றது. அந்தத் தேரர்கள்தான் இன்று பாராளுமன்றத்துக்குச் செல்ல ஒவ்வொருத்தரை அடித்துக் கொண்டு தடுமாறுகின்றார்கள். தேரர்கள் தான் நாட்டில் இன மதங்களுக்கு எதிராக பாகுபாட்டையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகின்றார்கள்” என்றார்.