Tamil News
Home செய்திகள் இலங்கை அரசின் காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ICRC கைவிடவேண்டும் !

இலங்கை அரசின் காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ICRC கைவிடவேண்டும் !

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோரின் அலுவலகத்தையோ அவ் அலுவலகத்தின் செயற்பாடுகளையோ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுக்காளான நாம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை எம்மத்தியில் சூட்சுமமாக திணிக்கும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் செயற்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியாசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் 837 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இன்னிலையில் இன்றையதினம் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

மேலும் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது ,

எமது உறவுகளுக்காக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எம்மால் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ள அதேவேளை காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எமக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தற்போது அரசின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் கொள்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது . இரகசியமான முறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் சிலரை முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைத்து சந்திப்பினை நடத்தி வருகின்றனர். இந்த செயற்பாட்டால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எமது உறவுகளுக்காக நீதிகோரி வீதியில் போராடும் நாம் விரக்தி அடைந்துள்ளோம் . யுத்தம் முடிந்து 9வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்து எம்மத்தியில் வராத சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று அரசின் காணாமல் போனோரின் அலுவலகத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எம்மத்தியில் வந்து காணாமல் போன உறவினர்களின் உறவுகளை பிரித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவவதை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளான நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version