இலங்கை அரசாங்கம் சரியான பயணத்தை ஆரம்பித்துள்ளது : எரிக் சொல்ஹெய்ம்

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறுவதற்காக இலங்கை அரசாங்கம் சரியான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வீரகேசரியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்களுடன் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், நாட்டின் சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக உடனடியான தெரிவாக சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் எல்லையைப் பெறுவதற்காக உரிய அணுகுமுறையைச் செய்து அதனைப் பெற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை நான் பாராட்டுகின்றேன்.

அத்துடன், இந்தியா, சீனா,யப்பான் உள்ளிட்ட இலங்கையின் இருதரப்பு  பாரிய கடன்வழங்குநர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டமைக்காகவும் அவரது தலைமைத்துவத்தினை பாராட்டும் அதேநேரம் குறித்த நாடுகளும் இலங்கை விடத்தில் கொண்ட கரிசனைகளையும் தீர்மானங்களையும் வரவேற்கின்றேன்.

இதேவேளை, இலங்கையானது தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்குரிய பாதையை தெரிவு செய்து சரியான பயணத்தினை ஆரம்பித்துள்ளது. இது முன்னோக்கிப் பயணிப்பதற்கும், நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.

மன்னார் விஜயம்

இதேவேளை, தனது மன்னார் விஜயம் பற்றிக் குறிப்பிட்ட அவர், மன்னார் மாவட்டத்துக்குச் சென்ற நான் தலைமன்னார் பகுதிக்கு சென்ற  அப்பகுதிகளைப் பார்வையிட்டதோடு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட வடக்கு, கிழக்கு ஆயர்களையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

அதனை தொடர்ந்து மன்னார் செபஸ்ரியார் பேராலயத்திற்குச்சென்று முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவருடைய நினைவு நாள் பேருரை நிகழ்விலும் கலந்து கொண்டேன்.

இதேவேளை, மன்னாரில் அமைந்துள்ள மற்றும் அமைக்கப்படவுள்ள காற்றாலைகள் தொடர்பில் உள்ளுர் மக்கள் கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களுடைய கவலைகள் தொடர்பில் உரிய பதில்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அவர்களுடனான கலந்துரையாடல்கள் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு உரிய இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்படுவது சிறந்த செயற்படாகும்.

மேலும், இலங்கையைப் பொறுத்தவரையில் காற்றாலைகள் ஊடாக மின்சாரம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடானது சிறந்த வாய்ப்பாகும். அத்துடன் சிறந்த வேலைவாய்ப்புக்களையும் உருவாக்குவதாக அமையும்.

அதுமட்டுமன்றி, குறித்த செயற்றிட்டமானது, சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத பூச்சிய நிலையைக் கொண்டதாகும். ஆகவே காற்றாலைகளின் பலன்களை உள்ளுர் மக்களும் உணர்ந்து கொள்வது அவசியமாகின்றது என்றார்.