இலங்கையில் முதல் முறை  டெல்டா வகை கொரோனா திரிபு கண்டுபிடிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவக் காரணாக இருந்த டெல்டா திரிபு, இலங்கையில் முதல் முறை கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் பிரிவின் பிரதானி சிறப்பு மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸ் இலங்கை சமூகத்திற்குள் இருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இப்போது முதல் முறையாக  சமூகத்திற்குள் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு – தெமட்டகொட பகுதியிலுள்ள ஐவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெல்டா திரிபு சமூகத்தில் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸை விடவும், இது 50 சதவீதம் வீரியம் கொண்டது என சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோசை மாத்திரம் எடுத்துக்கொண்டவர்களுக்கும், இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தனது ட்விட்டர் தளத்தில் மேலும் கூறியுள்ளார்.