இலங்கையில் பல நாடுகள் இருந்ததற்கான சான்றுகள் நிறுவப்படுகின்றன – மனோ கணேசன்

கண்டியின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகள், தமிழகம் வேலூரில் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது அரச மானியம் என்ற ஓய்வூதியம் வேண்டும் எனவும், அதை இலங்கை ஜனாதிபதி கோதாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரை சந்தித்து, கோர இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மூலம் இவர்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், நம்ம “சிலாபம் திண்ணனூரான்” இன்றைய வீரகேசரியில் எழுதியுள்ளார்.

இந்திய தூதுவர் இதற்கு உடன்படுவாரா என்பது அவரது அரசு எடுக்கும் முடிவில் தங்கியுள்ளது. அதுபற்றி நான் எதுவும் சொல்ல போவதில்லை.

இந்த நாயக்க வம்ச மன்னர்கள், தெலுங்கை தாய்மொழியாக கொண்டோர். எனினும் தமிழ்நாட்டில் வாழ்ந்து, ஆட்சி செய்து, தமிழராக உருமாறியவர்கள். ஆகவே இப்போது அவர்கள் அங்கும், இங்கு இலங்கை சரித்திரத்திலும் தமிழர்கள்தான். அதில் ஏதும் பிரச்சினை இல்லை.

கடைசி சிங்கள மன்னன் விமலதர்மன், மதுரை தமிழ் நாயக்க வம்ச இளவரசியை மணந்தார். இதிலேயே இந்த தமிழ் நாயக்க உறவு ஏற்பட்டது.

பிறகு இவரது மகன் நரேந்திரன் வாரிசு இல்லாமல் மரணிக்க, அவரது நாயக்க வம்ச மைத்துனர் கண்டி சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டார். இப்படிதான் நான்கு தமிழ் நாயக்க மன்னர்கள் கண்டியை ஆண்டார்கள்.

இவர்கள் உண்மையில் வீர்ர்கள்தான். இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக படை நடத்தி இந்நாட்டை பிடிக்கவில்லை. ஆனால், படை நடத்தி இந்நாட்டை காத்தார்கள். போர்த்துகீய, ஒல்லாந்த நாடுபிடியாளர்களால், ஏனைய சிங்கள மற்றும் யாழ் தமிழ் ராஜ்யங்களை பிடித்ததை போன்று, கண்டி மண்ணை தொட முடியவில்லை.

எனினும் கடைசியில் பிலிமதலாவ, எகலபொல போன்ற துரோகிகளால் தமிழ் நாயக்க மன்னன் காட்டிக்கொடுக்கப்பட, ஆங்கிலேயே நாடுபிடியாளர்கள், 1815ல் கண்டியை பிடித்தார்கள்.

மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாடு இலங்கைக்கு எப்போதும் முக்கியமானதுதான். முதல் “சிங்கள இளவரசன்” விஜயனும், தனக்கும், தன் நண்பர்களுக்கும் தமிழ் பாண்டிய நாட்டு இளவரசியையும், தமிழ் பெண்களையும் இரந்து பெற்று, மணந்துதான் சிங்கள இனமே உருவானது.

அப்படிதான் மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் கூறுகிறார். அந்த பாண்டிய நாடுதான், பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், காடு வெட்டி பெருந்தோட்டங்களை அமைத்து உழைக்க மட்டும் இலங்கைக்கு வரவில்லை. அதற்கு முன் இந்நாட்டை ஆளவும் வந்தார்கள் என்பது சரித்திர உண்மை.

kandy இலங்கையில் பல நாடுகள் இருந்ததற்கான சான்றுகள் நிறுவப்படுகின்றன - மனோ கணேசன்1739 முதல் 76 ஆண்டுகள் கண்டியை ஆண்ட, இந்திய வம்சாவளி தமிழ் நாயக்க மன்னராட்சி 1815ல் மன்னனின் கைதுடன் முடிகிறது. எட்டு வருடங்களின் பின் 1823ல்தான் முதல் கட்ட இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் கோப்பி பயிரிட ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

பின்னர் 1833ல் தான் முழு தீவும், ஆங்கிலேயரால் ஒரே நாடாக்கப்பட்டது.

இப்போது இந்த நாயக்க மன்னர்களின் வாரிசுகள், “அரச மானியம் என்ற ஓய்வூதியம் கொடுங்கள்” என எப்படி இலங்கை அரசை கோருகிறார்கள் என எனக்கு விளங்கவில்லை.

இந்தியாவிலும், இப்படி பல முன்னாள் மன்னர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியங்களை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்து நிறுத்தி விட்டார். அப்புறம் எப்படி இந்திய தூதுவர் இவர்களுக்கு இதில் உதவுவது?

மேலும் இப்படி கோரிக்கை விடப்பட்டால், இலங்கை அரசு அதையும் தனது இனவாத போக்குக்கு பயன்படுத்தலாம்.

இங்குள்ள பெருந்தேசியவாத சக்திகள், இலங்கையில் அப்போது வெவ்வேறு ராஜ்யங்கள் இருந்ததாகவே இப்போது காட்டிக்கொள்வது இல்லையே. சரித்திரம் முழுக்க ஒரே நாடாகவேதான் இலங்கை தீவு எப்போதும் இருந்ததாக அல்லவா இவர்கள் புது சரித்திரம் எழுதுகிறார்கள்.

தமிழகம் வேலூரில் வாழும் மன்னர் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகளுக்கு ஒரு “ஐடியா” சொல்லலாம்.

sangili king இலங்கையில் பல நாடுகள் இருந்ததற்கான சான்றுகள் நிறுவப்படுகின்றன - மனோ கணேசன்இலங்கை அரசிடம் மானியம் கேட்பதை விட்டு விட்டு, அப்போது விக்கிரமராஜசிங்க மன்னனை கைது செய்து, வேலூரில் கொண்டு போய் சிறை வைத்த, ஆங்கிலேய அரசிடம் அல்லது நேரடியாக இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் மாளிகையிடம் கேளுங்கள்.

அதேபோல் சங்கிலி மன்னனின் வாரிசுகள் இருந்தால், அவர்கள் போர்த்துகேயரிடம் கேட்கலாம்.

இவற்றில் தர்க்க நியாயம் இருக்கிறது. இங்கே பல நாடுகள் இருந்தன என்பதும் நிறுவப்படுகிறது.