Tamil News
Home செய்திகள் இலங்கையில் பரவும் கொரோனா- ஆய்வு சொல்வதென்ன?

இலங்கையில் பரவும் கொரோனா- ஆய்வு சொல்வதென்ன?

ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் கொரோனா வைரஸே இலங்கையிலும் தற்போது பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இந்த மாத ஆரம்பத்தில் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்ட நிலையில், அன்றிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம்காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதே நேரம் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் முன்னதாக தெரிவத்திருந்தது.

 இதையடுத்து சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில்  ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், தற்போது  இலங்கையில் வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை  அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை அண்மித்தே இந்த கோவிட் வைரஸ் பிரிவு பரவி வருகின்றமை, சர்வதேச தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழு குறிப்பிடுகின்றது.

இந்தியாவிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவில் பரவி வரும் வைரஸ் பிரிவுடன் இந்த வைரஸ் பிரிவு தொடர்புப்படவில்லை என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வைரஸ் பிரிவிற்கும், இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸ் பிரிவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக அந்த குழுவினர் உறுதிப்பட தெரிவிக்கின்றனர்.

Exit mobile version