இலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள கல்லடிப்பாலம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழிற்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கின்றது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் 1924ஆம் ஆண்டு காலத்தில் இந்தப் பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1928ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அந்தப் பாலத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டகள் ஆகவுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள கல்லடி என்னும் பிரதேசத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளதால் இதனை ‘கல்லடிப் பாலம்’ என்று மக்கள் பரவலாக அழைத்தாலும், ‘லேடி மன்னிங் பாலம்’ (Lady Manning Bridge) என்பதுதான் இதன் பெயராகும். அப்போதைய இலங்கை ஆளுநர் சேர் வில்லியம் ஹென்றி மன்னிங் என்பவரின் காலத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டதால், அவரின் மனைவியை கௌரவிக்கும் வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டதாகத் தெரியவருகின்றது.

kalldy4 இலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள கல்லடிப்பாலம்இலங்கையில் நீளமான இரும்புப் பலமாகவும் இது இருந்துள்ளது என்றும் ஒரு தகவல் உள்ளது.

இவ்வாறான பெருமைகளைக் கொண்ட இந்தப் பாலம் சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டதாலும், தற்கால போக்குவரத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருப்பதாலும், அதற்கு அருகில், சமாந்தரமாக புதிய பாலமொன்று 2013ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

அதனால், பழைய இரும்புப் பாலம் தற்போது நடைபாதையாகவும், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்திற்காகவும் மட்டும் பயன்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த 63 தற்கொலைகளில், 14 தற்கொலைகள் கல்லடிப் பாலத்தில் இடம்பெற்றதாக மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.சரவணபவன் தெரிவிக்கின்றார்.

மேலும், இந்த வருடத்திலும் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து, அதன் கீழுள்ள வாவியில் விழுந்து தற்கொலை செய்தோரின் பட்டியலும் நீண்டு வருகின்றது.

கல்லடிப் பாலத்திலிருந்து இந்த வருடம் ஜனவரி 4ஆம் திகதி குதித்து தற்கொலை செய்து கொண்ட – மட்டக்களப்பு மாவட்டம் நாவற்குடாவைச் சேர்ந்த 16வயதுடைய சிறுமியொருவரின் சடலம் மூன்று நாட்களுக்குப் பின்னர் 7ஆம் திகதி கரையொதுங்கியது.

அதே மாதம் 27ஆம் திகதி அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த ஜுலை மாதம் 3ஆம் திகதி அதே பாலத்திலிருந்து குதித்து மாண்டார்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, மேற்படி பாலத்திலிருந்து குதித்த யுவதியொருவர் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

kallady இலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள கல்லடிப்பாலம்இவ்வாறு கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்களினதும், தற்கொலைக்கு முயற்சித்தவர்களினதும் பட்டியல் நீளமானதாகும்.

எனவே, இந்தப் பாலத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம்,  அந்த இடத்தைப் பாதுகாப்பும் பயன்பாடும் மிக்க இடமாக மாற்றுவதற்கான தீர்மானமொன்று மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்தப் பாலத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றவர்களைக் காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணிநேரமும் படகு ரோந்து சேவையை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிப்பதற்கான தீர்மானமும் அன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.ஆர்.சரவணபவன் இந்த முன்மொழிவுகளை சமர்ப்பித்த போது, அதனை ஏகமனதாக சபை அங்கீகரித்து தீர்மானமாக நிறைவேற்றியது.

ஆயினும், இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 7 மாதங்கள் கடந்து விட்ட போதும், இதுவரையில் அவற்றில் எதனையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை.

கல்லடி பாலத்தில் நிகழும் தற்கொலைகளைத் தடுப்பதற்கான யோசனைகள் மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு, அவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட பின்னரும், அவை நடைமுறைக்கு வராத நிலையில், அதே பாலத்தில் மேலும் சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சரவணபவனை தொடர்பு கொண்டு பேசிய போது கல்லடிப் பாலத்திற்கு அருகில் சாகசப் பூங்கா (Adventure Park) ஒன்றினை அமைப்பதற்கு வெளிநாட்டு அரசு சாரா நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மிக விரைவில் அதன் நிர்மாண வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆயினும் பாலத்தில் நிகழும் தற்கொலைகளைத் தடுப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு படகுச் சேவையினை உடனடியாக ஆரம்பிப்பதென, மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரையில் தொடங்கப்படவில்லையே எனக் கேட்ட போது, அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், கல்லடிப் பாலத்தில் தற்கொலைகள் எவையும் நிகழவில்லை என்றும், எனவே கண்காணிப்பு படகுச் சேவை ஆரம்பிக்க வேண்டிய தேவை எழவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால், அவர் கூறிய தகவல் தவறானது என்பதை ஊடகங்கள் உறுதி செய்து கொண்டது.

மட்டக்களப்பு மாநகரசபையில் மேற்படி தீர்மானம் கடந்த பெப்ரவரி மாதம் எடுக்கப்பட்டு அவை அமுல்ப்படுத்தப்படாத நிலையில், மட்டக்களப்பு- கூழாவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜுலை மாதம் 3ஆம் திகதியன்று அந்தப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்திருந்தார்.

எனவே, இந்த அவலங்களை இல்லாமல் செய்யும் பொருட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, சமூக  அக்கறையுடையோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.