‘இலங்கையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’- மேச்சல் நில விவகாரத்தில் எம்.பி சிறிதரன் கண்டனம்

மட்டக்களப்பில் மேச்சல் நில விவகாரத்தில் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மேச்சல் நில பகுதியான மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மை சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை காரணமாக அங்கு கால்நடை வளர்ப்போர் பாதிப்புகளை எதிர்நோக்குவதுடன், அம்மக்களாலும் பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கால்நடைகளுக்கும் உணவில்லாம் அவைகளும் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு பெரும்பான்மை சமூகத்தினரால் கால்நடைகள் பொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வருகின்றது.

இந்த சம்பவங்களை வெளியுலகிற்கு செய்திகளாக கொண்டுவந்த பல ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு பொலிஸாரால்   தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டுக்கொண்டிருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் தனது கண்டனத்தை  பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,

“இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நானும் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு எத்தனையோ முறைப்பாடுகள் செய்திருக்கிறேன். எத்தனையோ கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

ஏனென்றால் இலங்கையில் இருக்கிற மனித உரிமை ஆணைக்குழு என்பது ஒரு அரச நிறுவனம். அரசாங்கத்திற்காக பேசுகிற நிறுவனம். அது அரசிற்காக எதுவும் செய்யும். அந்த நிறுவனம் நீதியான முறையில் நடப்பதாக நாங்கள் பார்க்க முடிவதில்லை.

நிலாந்தன் இன்று அச்சத்தின் மத்தியிலே வாழ்கிறார். அவருடைய குடும்பம் அச்சுறுத்தப்படுகின்றது. அவருடைய வீட்டுக்கு அடிக்கடி இனந்தெரியாத நபர்கள் செல்கிறார்கள். தொல்லைபேசி எடுக்கிறார்கள்.  அச்சுறுத்தப்படுகின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படமுடியவில்லை. அதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியில் கொண்டுவர முடியவில்லை.

மேலும் மட்டக்களப்பு மேய்ச்சல் நில விவகாரத்தால் அந்த மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கின்றனர். இந்த உண்மைகளை வெளியில் கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்களை இவ்வாறு அச்சுறுத்துவது அடக்கமுனைவது ஒரு ஜனநாயக நாட்டுக்கு பண்பல்ல. இந்த மனித உரிமை ஆணைக்குழு ஏன் நித்திரைகொள்கிறது. ஊடகவியலாளர் நிலாந்தன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உலகத்தில் உள்ள மனித உரிமையாளர்கள் தமிழ் மக்கள் குறித்து சிந்தியுங்கள்”  என்றார்.