இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள்

இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த சிங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்றாகும்.

சிங்களம் மட்டும் சட்டம், அதிகாரபூர்வமாக, “1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்” என்ற பெயரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூ ன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

“சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியாக அதுவரை காலமும் இருந்த ஆங்கில மொழி அகற்றப்பட்டு பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

தமிழ் எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலம் உடனடியாகவே இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்தது. இனநெருக்கடி தீவிரமடைந்து – ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைவதற்கும் இந்தச் சட்டமூலமே முக்கிய பங்களிப்பை வழங்கியது.

1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது. 1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.

பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, ஜூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர்.

இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப் பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதனை எதிர்த்து அரசப் பணியிலிருந்த தமிழர்கள் பலர் பதவி விலகினார்கள்.

இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.

“ஒரு மொழி இரண்டு நாடுகள்! இரண்டு மொழிகள் ஒரு நாடு” என இது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா அப்போது தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு மத்தியிலும் உறுதியாக நின்று இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தினார் பண்டாரநாயக்க. நாட்டில் ஒரு பாரிய இரத்தக்களரிக்கான அத்திவாரத்தை இதன்மூலம் அவர் போட்டார்.