இலங்கைக்கான கடன் நிபந்தனைகள் – IMF பிரதிநிதிகளை சந்திக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரிகள்

சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரிகள் இன்று (30) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளைச் சந்தித்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகமொன்று கருத்து தெரிவித்த அவர், உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் அதேவேளையில் இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நன்கு புரிந்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்ற நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த காலங்களில் கவலைகளை எழுப்பியிருந்தது.

சர்வதேச மன்னிப்புச் சபையானது, இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளில் பொருளாதார, சமூக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கும் என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார். “எந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், அது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்புகளை கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் சமூக செலவினங்களில் குறைப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்று மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். அனைத்து கடன் வழங்குபவர்களும் மனித உரிமைகள் கடமைகளை கடைபிடிக்க வேண்டும். அதன் முழு செயல்முறையும் வெளிப்படையாகவும் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.