இலக்கின் முள்ளிவாய்க்கால் உலக இனப்படுகொலை தினத்தின் 12ஆவது ஆண்டுப் பிரகடனம்

ஈழத் தமிழரின் உரிமைகள் மீட்புக்காக அமைதி வழியில் சனநாயகத் தத்துவங்களின் அடிப்படையில் உழைப்பதற்கு உறுதி பூண்டவர்களாகிய நாங்கள், முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பு என்னும் 21ஆம் நூற்றாண்டின் முதலாவது உலகப் இனப் படுகொலைத் தினமான 18.05.2009 ஐ வலிசுமந்த நெஞ்சுடன் எண்ணிப் பார்க்கின்றோம். அந்நாளில் சிறீலங்கா தான் அறிவித்த யுத்த சூன்யப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயங்களை நோக்கி வந்து புகலிடம் தேடிய ஈழத் தமிழர்களை நிர்வாணப்படுத்தியும், அவமானப்படுத்தியும், கூட்டாகப் பாலியல் வன்முறைப்படுத்தி, உள்ளத்தையும் உடலையும் வருத்தியும், சித்திரவதைகள் செய்து துடிக்க வைத்தும், உயிருடன் புதைத்தும், சிதைத்தும், கொத்துக் குண்டு வீச்சுகளாலும், தொடர் ஏவுகணை வீச்சுக்களாலும், இராசயன ஆயுதப் பிரயோகங்களாலும் அழித்த இரத்தக்கறை படிந்த மனிதகுல வரலாற்றின் 12ஆவது ஆண்டான இன்று 18.05.2021 உலக இனப் படுகொலைத் தினமாக நினைவேந்தல் பெறுகிறது. இந்நாளில் பின்வரும் உறுதி மொழிகளை முன்வைத்து, நீதிக்காகவும், பாதுகாப்பான அமைதிக்காகவும் உழைக்கும் அனைத்து ஈழத் தமிழர்களுடனும்,  உலகத் தமிழர்களுடனும், அனைத்துலக மக்களுடனும், அமைப்புக்களுடனும், நாடுகளுடனும் இணைந்து பயணிக்க ‘இலக்கு’ இவ்வாண்டில் ஆயத்தமாக உள்ளது.

  • உலக வல்லாண்மையாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சி இலங்கையில் இருந்த 1833இல் கோல்புறூக் அரசியல் அமைப்பு மூலம், இரு தேசங்களாக இருந்த தமிழ் சிங்கள தேசங்களை ஒருநாடாக ஈழத் தமிழர்களின் விருப்பு அறியப்படாது இணைத்ததின் பின்னணியில் 1921ஆம் ஆண்டு சிங்களப் பெரும்பான்மை ஆட்சி மன்னிங் சீர்திருத்தத்தின் வழியாக ஏற்பட்டமையே ஈழத் தமிழின அழிப்புக்கான முதல் விதையாயிற்று. அவ்வாண்டு முதல் ஒரு நூற்றாண்டாக வளர்ந்து வரும் சிங்கள பௌத்த மேலாண்மை ஆட்சி முறைமையே இன்று வரையான ஈழத் தமிழின அழிப்புக்கான ஆற்றலைச் சிங்கள அரசாங்கங்களுக்கு அளித்து வருகிறது. எனவே ஈழத் தமிழர் பிரச்சினை என்பது காலனித்துவ காலத்து தீர்வு காணாத பிரச்சினையாகவே தொடர்கிறது என்பதை பிரித்தானியா உட்பட்ட அனைத்து நாடுகளுக்கும் எடுத்து விளக்கி ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியை மீள் நிலை நிறுத்துமாறு உழைப்பது.
  • இந்தியா பிராந்திய மேலாண்மைக்குரிய தன்மையுடன் ஈழத் தமிழர் பிரச்சினையை அணுகி வருவதால் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான அமைதிக்கு உதவுவது இந்தியாவின் கடமையாக உள்ளது என்பதை இந்தியாவுக்கு எடுத்து விளக்கும் அணுகுமுறைகளை உருவாக்கி, ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியை மீள் நிலை நிறுத்துமாறு இந்தியாவைக் கோரிட தமிழகத்திலும் மற்றைய மாநிலங்களிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து உழைப்பது
  • ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புரிமை நாடுகளுக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை என்ற அவர்களின் பார்வையாலேயே ஈழத் தமிழின அழிப்பைச் சிறீலங்கா தொடர்கிறது என்பதை உணர்த்தி ஈழத் தமிழர் பிரச்சினை அனைத்துலகத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை வலியுறுத்த பொதுக் கருத்துக் கோளத்தை வளர்க்க வல்ல ஈழத் தமிழர்களுக்கான தேசிய ஊடக வளர்ச்சி மூலம் உழைப்பது.
  • உலகத் தமிழினத்தில் பெரும்பான்மையினராக உள்ள புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களை, தாயகத்தில் ஈழ மக்களுக்குச் சக்தியளிக்கும் வகையில் சமூக மூலதனங்களையும், அறிவாற்றல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கத் தக்க வகையில் இணைத்திட உழைப்பது. இதன்வழி ஈழத் தமிழர்களை உலகச் சந்தைகக்கு பங்களிப்புக்களைச் செய்யக் கூடிய சமுதாயமாக வளர்ச்சி அடைய வைப்பதன் வழியாகவே அவர்களுக்கான பிரச்சினைத் தீர்வுக்கும், உரிமைகள் மீட்சிக்கும் உலக நாடுகளும், அமைப்புக்களும் உதவிடுவார்கள் என்ற எதார்த்தத்தை உணர்ந்து அதற்கான கட்டமைப்புக்களை ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் உருவாக்கிட உழைப்பது.