இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும்.

ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை.

ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது.

122432288 3366097240170175 752694134201280969 n இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்

இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது.

இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்.

இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

20th இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்

அரசாங்கத்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள்.

இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது.

அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தகுமார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார்.

சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது.

இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும்.

அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின்  கவலை.

இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும்.